
தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பொன்னி ர வி என்பவர் 2020 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை ஒன்றை ஜெயராஜ், ஃபெனிக்ஸ் நடத்தி வந்தனர். கடந்த 19ம் தேதி இரவு செல்போன் கடையை அடைப்பது தொடர்பாக ஜெயராஜ், ஃபெனிக்சுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த நிலையில் வணிகர்கள் கொலையில் மதத்தைப் புகுத்தி பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. மேலும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்த தி.மு.க உள்ளிட்ட கட்சிகளையும் இந்த சம்பவத்தையும் இணைத்து பதிவிடுவது சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இறந்த ஃபெனிக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகக் கூறி, இதனால் சந்தேகம் எழுகிறது என்று கூறி சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமணத்தின் போது எடுத்தது என்று தெரியவந்தது. படத்தில் ஸ்டாலினுக்கு வலது பக்கத்தில் கடைசியில் நிற்கும் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகரனை ஃபெனிக்ஸ் என்று சந்தேகிக்கிறார்களோ என்று தோன்றியது. அது விக்கிரமராஜாவின் மகன்தான் என்பதை உறுதி செய்ய அவரது திருமண புகைப்படத்தையும் தேடி எடுத்தோம். அதுவும் விக்ரமராஜாவின் பிளாக் பக்கத்தில் நமக்கு கிடைத்தது.

இந்த படத்தில் ஃபெனிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உள்ளார்களா என்று தெரிந்துகொள்ள, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவைத் தொடர்புகொண்டு படத்தில் உள்ளவர்கள் யார் என்று கேட்டோம்.
அப்போது அவர், “சமூக ஊடகத்தில் எங்கள் குடும்ப படத்தைப் பகிர்ந்து வதந்தி பரவி வருவதை நானும் பார்த்தேன். இந்த படத்தில் உள்ளவர்கள் எங்கள் குடும்பத்தினர். மறைந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸை நான் நேரில் சந்தித்தது இல்லை. தந்தை, மகன் இறந்த சம்பவத்தை மதப் பிரச்னையாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. என் மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க தி.மு.க தலைவர் வந்தபோது எடுத்த படம் இது” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
இந்த படம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபெனிக்ஸ் போன்று படத்தில் உள்ள நபர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகரன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்தது இல்லை என்று விக்கிரமராஜா உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஃபெனிஸ் குடும்பத்தினர் மு.க.ஸ்டாலினை முன்பே சந்தித்து புகைப்படம் எடுத்ததாக பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்? – ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
