தொழிலாளர்கள் குடிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியது உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

தொழிலாளர்கள் குடிலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மோடிக்கு தேர்தல் ஆணையம் பொய்யான வெற்றியைத் தேடித் தந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

தேர்தல் கமிஷன்.. மோடிக்கு புரோக்கர் வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்த காட்சி…

Archived link

1.24 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தகரத்தால் ஆன குடிசை ஒன்றில் நிறைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பெட்டிகள் காட்டப்படுகிறது. போலீஸ்காரர் ஒருவர் அதைத் திறந்து பார்க்கிறார், முதல் பெட்டி காலியாக இருந்து. மற்ற பெட்டிகளில் துணி, அரிசி உள்ளிட்டவை இருந்தன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் கருவிகளும் இருந்தன.”

இந்த வீடியோவை நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை நடந்த 2019 மே 23ம் தேதி Madhar Syed என்பவர் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “தேர்தல் கமிஷன்.. மோடிக்கு புரோக்கர் வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்த காட்சி…” என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி இந்த பதிவை ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோவை பார்த்தபோது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட பெட்டிகளை துணிமணிகள், சமையல் பொருட்கள் வைக்கும் பெட்டியாக பயன்படுத்தியது தெரிந்தது. இருப்பினும், விவிபிஏடி கருவி இருப்பதும் தெரிந்தது.

EVM 2.png

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. இது போன்று வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறதா என்று தேடினோம். அப்போது, மற்றொரு வீடியோ கிடைத்தது.

Mohideen Abdul Kadher என்பவர் 2019 மே 27 அன்று அந்த பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “கர்நாடக மாநிலம் பீஜபூரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிலில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன!” என்று குறிப்பிட்டிருந்தார்.

Archived link

கர்நாடக மாநிலம் பீஜபூரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டெடுக்கப்பட்டது என்று Mohideen Abdul Kadher குறிப்பிட்டிருந்ததால், இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம்.

EVM 3.png

நம்முடைய தேடலில், இந்த சம்பவம் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் வெளியாகி இருந்தன. டைம்ஸ் நவ் செய்தியை திறந்து படித்தோம். கடந்த ஆண்டு மே 20ம் தேதி இந்த செய்தி வெளியானது தெரிந்தது. வடக்கு கர்நாடகம் விஜயபுரா மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பெட்டி மற்றும் எட்டு யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபிஏடி இயந்திரங்கள் பேட்டரி இல்லாமல் கண்டெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இந்த தகவலுக்கு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பெட்டிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதை தொழிலாளர்கள் தங்கள் துணிகளை வைக்கும் பெட்டியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைத்து இரண்டு நாட்கள் கழித்து, 2019 மே 22ம் தேதி கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், “தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். வாக்குப்பதிவு விவிபிஏடி இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது” என்று கூறியிருந்தார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

இந்த சம்பவம் 2018ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் நடந்துள்ளது. ஆனால், விஷமத்தனத்துடன், 2019 நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, “தேர்தல் கமிஷன்.. மோடிக்கு புரோக்கர் வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்த காட்சி…” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். இதன் மூலம், பழைய வீடியோவை எடுத்து, தற்போது நடந்தது போல் பதிவிட்டுள்ளது உறுதியாகிறது.

Mohideen Abdul Kadher ஃபேஸ்புக் பதிவில், “கர்நாடக மாநிலம் பீஜபூரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிலில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன!” என்று குறிப்பிட்டுள்ளனர். எங்கு, எப்போது என்று குறிப்பிடவில்லை. அதே நேரத்தில்,  வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தோற்றத்தை இவரது பதிவு உருவாக்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்க பயன்படும் பெட்டி கைப்பற்றப்பட்டது உண்மை. ஆனால், இது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ. தற்போது நிகழ்ந்தது போல் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இதனால், இந்த தகவல் தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தொழிலாளர்கள் குடிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியது உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •