
பார்லே ஜி பிஸ்கட்டில் பன்றியின் கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஜூன் 13ம் தேதி Jerry memes என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. பார்லே ஜி உள்ளிட்ட பிஸ்கட்களில் எமல்சிஃபயர் 471 என்ற பொருள் கலக்கப்படுவதாகவும், இது பன்றியின் கொழுப்புப் பொருள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதனை பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் கூறப்படுவது போல, பார்லே ஜி பிஸ்கட்டில் பன்றி கொழுப்புப் பொருள் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். முதலில் அந்த பிஸ்கட் பாக்கெட்டின் மேலே அச்சிடப்பட்டுள்ள மூலப்பொருட்கள் பற்றி கவனித்தோம். அதில், எமல்சிஃபயர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எமல்சிஃபயர் 471 என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதாவது, எமல்சிஃபயர் எனக் குறிப்பிடப்பட்டு அதன் அருகே அடைப்புக்குறியிட்டு அதில், DI-ACETYL TARTARIC ACID ESTERS OF MONO AND DI-GLYCERIDES OF EDIBLE VEGETABLE OILS எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது என்னவென்று, தரவுகளை தேடிப் பார்த்தோம். இதன்படி, இந்த மூலப் பொருளை DATEM என்றும், E472e என்றும் அழைக்கிறார்கள் என தெரியவந்தது. அத்துடன், இது தாவர வேதிப் பொருட்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, சோயா போன்றவற்றில் இருந்தே இப்பொருள் தயாரிக்கப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சோயாபீன் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இப்பொருளையே பார்லே ஜி தனது பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்துவதாக, சந்தேகமின்றி தெரியவருகிறது. இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அத்துடன் இதுபற்றிய தகவல் தேடுதலின்போது, பார்லே ஜி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், தங்களது பிஸ்கட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பற்றி விளக்கம் அளித்திருந்தார்.
அதாவது, தங்களது தயாரிப்பில் பன்றிக் கொழுப்பு எதுவும் இல்லை என அவரே குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அத்துடன், எமல்சிஃபயர் 471 பற்றியும், E472e பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து விளக்க அட்டவணையை பார்க்கவும்.
நாம் ஆய்வு செய்யும் பதிவில் கூறப்படுவதுபோல, E471 என்பது சில சமயங்களில் தாவர கொழுப்பு அல்லது பன்றி போன்ற விலங்கின கொழுப்புகளில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. E471 பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள், அதில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதா, தாவர கொழுப்பு கலந்துள்ளதா என்றும் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். தங்களது தயாரிப்பு விளக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடுவது அவர்களின் கடமையாகும். இதிலும் கூட பன்றி கொழுப்பை முழுதாக புறக்கணித்து தாவர எண்ணெய் மட்டுமே பல உணவுப் பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அமுல் நிறுவன பொருட்களில் இப்படி பன்றி கொழுப்பு கலக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்நிறுவனம் இதனை தெளிவாக மறுத்திருந்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆனால், பார்லே ஜி பிஸ்கட்டில் E471 கலக்கப்படுவது இல்லை. முற்றிலும் தாவர எண்ணெய்ப் பொருட்களை (E472e) பயன்படுத்தியே இந்த பிஸ்கட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல் பலரும் இத்தகைய வதந்தி பரப்பி வருகிறார்கள். நமது வாசகர்கள் இதனை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பார்லே ஜி பிஸ்கட் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்பட்டது: சர்ச்சை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
