அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க ஏழு அடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, எழுப்பப்பட்ட பிறகு என்று இரண்டு படங்கள் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்படுவதற்கு முந்தைய படத்தில் சாதா இந்தியா என்றும், சுவர் எழுப்பப்பட்ட படம் டிஜிட்டல் இந்தியா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “மும்முறை முதல்வர், இருமுறை பிரதமர், 25 வருஷமா பாஜக குஜராத்தை ஆள்கிறது… ஆனாலும் குடிசையை மறைக்க 7 அடி சுவர் தேவைப்படுகிறது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Dmk Prakash என்பவர் பிப்ரவரி 16, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகிற 24ம் தேதி வர உள்ளார். இதையொட்டி குஜராத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் வருகை தர உள்ளார். இதனால், அந்த வழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

bbc.comArchived Link 1
tamil.news18.comArchived Link 2
theprint.inArchived Link 3

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் எழுப்பப்பட்ட சுவர் என்று படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில் சாலை ஓரம் ஏழைகளின் குடியிருப்பு உள்ளது. இரண்டாவது படத்தில், அந்த குடியிருப்புக்களை மறைத்தபடி உயரமான மதில் சுவர் உள்ளது. இந்த இரண்டு படத்திலும் சாலையில் ஒரே இடத்தில் ஆட்டோ நிற்கிறது. பார்க்கும்போதே இது போட்டோ ஷாப் முறையில் உருவாக்கப்பட்ட படம் என்பது தெரிகிறது. இருப்பினும் இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியா என்று ஆய்வு நடத்தினோம். 

dailymail.co.ukArchived Link

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் 2015ம் ஆண்டு டெய்லி மெயில் என்ற இணைய ஊடகத்தில் வெளியானது தெரிந்தது. அதில், இந்த இடம் டெல்லியில் பட்பார்கன்ஜ் என்ற இடத்தில் உள்ள நேரு கேம்ப் என்று குறிப்பிட்டிருந்தனர். அதே ஊடகத்தின் இ-பேப்பரில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் நமக்கு கிடைத்தது.

https://twitter.com/Bharatvarsha2/status/634339107892690944
Archived Link

நம்முடைய ஆய்வில்,

அகமதாபாத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகைப்படம் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டது இல்லை, டெல்லியில் எடுக்கப்பட்ட ஒன்று என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையும் தவறான படத்தையும் சேர்த்து இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு பாதி உண்மை, பாதி பொய் என்று முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False