
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்கும் பதில் சொல்ல முடியாததால்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பது இல்லை என்று ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் பங்குபெறும் அ.தி.மு.க நிர்வாகிகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், “தவிக்கும் தமிழகம்… பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளியும் அ.தி.மு.க. தண்ணீர் பிரச்னை பற்றி ஊடகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடக விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, மாற்றியோசி Mattriyoci என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூன் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 இடங்களில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க 9 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
அ.தி.மு.க ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது தொண்டர்களை கலக்கம் அடையச் செய்தது. அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று பேட்டி அளித்தார். அது தொலைக்காட்சி விவாதங்களுக்கு தீனி போடுவது போல் அமைந்தது.
இந்தநிலையில், 2019 ஜூன் 12ம் தேதி அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனுடன், ஊடகங்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் பேட்டி அளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், “நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக்கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துகளை அ.தி.மு.க.வின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய பிரச்னையாக ஒற்றைத் தலைமை பிரச்னைதான் இருந்தது என்பதை அப்போது வெளியான செய்திகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். தினதந்தி வெளியிட்ட செய்தியில் கூட, ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டதா என்று பெரிய தலைப்பிட்டதை காண முடியும்.

மேலும், அப்போது நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்து தேர்தல் தொடர்பானதாகவே இருப்பதைக் காண முடியும். தண்ணீர் பிரச்னை பற்றி அந்த தீர்மானத்தில் எந்த தகவலும் இல்லை.
மேலும், அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தினமலரில் வெளியான செய்தியில், “ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் அனல் வீசச் செய்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேச கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அத்துடன் கோஷ்டி பூசலை தவிர்க்கவும் தற்போதுள்ள இரட்டை தலைமை நீடிக்க வேண்டுமா அல்லது பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலர் பதவியை உருவாக்கலாமா என்பது குறித்து விவாதிக்கவும் ஜூன் 12ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்கு அவசர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் பிறகே, அ.தி.மு.க-வினர் கருத்து தெரிவிக்க தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த காரணத்தால்தான் ஊடகங்களில் பேச தடை என்று வெளிப்படையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், தடை வந்த காலத்தில் ஒற்றைத் தலைமை என்பதே மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு சில கட்சிகள் இப்படி ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடைவிதிப்பது வாடிக்கையானதுதான். காங்கிரஸ் கட்சி கூட டி.வி விவாதங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தற்காலிகமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, தண்ணீர் பஞ்சம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தண்ணீர் பிரச்னை பற்றி ஊடகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடக விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதன் மூலம் மேற்கண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அ.தி.மு.க-வினர் டி.வி விவாதங்களை புறக்கணிக்க தண்ணீர் பஞ்சம் காரணமா?
Fact Check By: Praveen KumarResult: False
