தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!
#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi

Archived Link

சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். அச்செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link

இதில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால், மோடிக்கு எழுதியுள்ள காரசாரமான கடிதத்தில் உள்ள விவரங்களை செய்தியாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாகவே, இச்செய்திக்கு ‘’தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது,’’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இந்த செய்தியில் குறிப்பிடுவதுபோல, அஜய் அகர்வால் எதுவும் மோடிக்கு கடிதம் எழுதினாரா அல்லது புகார் எதுவும் அளித்தாரா என்ற கோணத்தில் தேடிப் பார்த்தோம். இதன்பேரில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி அஜய் அகர்வால் இதுபற்றி மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக, தகவல் கிடைத்தது.

தி வொயர் வெளியிட்டுள்ள செய்தியில், அவரது பெயர் அஜய் அக்ரவால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், அந்த செய்தியின் விவரமும், சத்தியம் டிவி செய்தியில் கூறப்பட்டுள்ளதும் ஒன்றுதான். அதாவது அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’டிசம்பர் 6, 2018 அன்று மணி சங்கர் அய்யரின் வீட்டில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகளிடையே நடைபெற்ற சந்திப்பு பற்றிய தகவலை நான்தான் முதலில் மோடி உள்ளிட்டோருக்குச் சொன்னேன். இதன்பேரில்தான், குஜராத் சட்டமன்ற தேர்தலில் தேச பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களை முன்வைத்து, பாஜக தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியது. அதன் பலனாக, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. ஒருவேளை, நான் அந்த விசயத்தைச் சொல்லாமல் விட்டிருந்தால், பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னேறுமா என்பது சந்தேகம்தான். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என்று தற்போது கூறுகிறார்கள். ஆனால், நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெறும் பட்சத்தில், அவர்களால் 40 தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இந்த அதிர்ச்சிகர உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். என்னைப் போன்ற, அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, சர்வாதிகார நிலையை நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை மேற்கோள் காட்டியே சத்தியம் டிவியும் கடந்த ஏப்ரல் 17ம் தேதி மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த தகவல் உண்மைதான் என தெளிவாகிறது.

தி வொயர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, தனது கடிதம் பற்றியும், மோடி மீது தனக்குள்ள அதிருப்தி பற்றியும் அஜய் அகர்வால், ஏப்ரல் 10ம் தேதி ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியின் வீடியோவும் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மக்களவை தேர்தல் நேரம் என்பதாலும், மோடி பற்றி அந்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளதாலும் பலரும் இதனை வைரலாக பகிர்ந்து வருவதாக, தெரியவருகிறது.

Avatar

Title:தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

Fact Check By: Parthiban S 

Result: True