கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

அலிகாரில் இரண்டரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பாலிமர் மற்றும் கதிர் நியூஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Archived link 1

Archived link 2

இரண்டரை வயது சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணம் : அதிர்ச்சி உண்மைகள் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஜூன் 10ம் தேதி, TN MODI FANS என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. அதில், கதிர் நியூஸ் என்ற இணைய தளத்தில் வெளியான செய்தியின் லிங்க் கொடுக்கப்பட்டு இருந்தது.

கதிர் நியூஸ் என்ற செய்தி இணையதளத்தில், “அலிகார் சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.  இந்த தகவல் உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டரை வயது சிறுமி ஒருவர்  கடந்த மே 31ம் தேதி கடத்தப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 2ம் தேதி அவரது உடல் அழுகிய நிலையில் குப்பை மேட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இரண்டரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவவே, மக்கள் தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். மரணம் அடைந்த சிறுமிக்கு நீதி வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுப்பினர். அது ஒரு கட்டத்தில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார் என்றும், சிறுமியின் கண்கள் பிடுங்கப்பட்டன என்றும், சிறுமி உடலில் அமிலம் ஊற்றப்பட்டது என்றும் பொய்யான வதந்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால், இவை அனைத்தையும் அலிகார் போலீசார் மறுத்தனர்.

இது தொடர்பாக அலிகார் போலீசார் கூறுகையில், “சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி இறந்துள்ளார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது தவறான தகவல். பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை, சிறுமியின் பெற்றோருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்ட கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ALIGARH 1A.png

படம்: சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை.

இந்தநிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஆதாரமாக அளித்திருந்தனர்.

ALIGARH 2.png

பாலிமர் செய்தியைப் படித்துப் பார்த்தோம். பாலிமரில் வெளியான செய்தியை அப்படியே எடுத்து கதிர் நியூஸ் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. என்ன ஒரே வித்தியாசம், பாலிமர் தொலைக்காட்சி நிறுமியின் பெயரை வெளியிடவில்லை. கதிர் நியூஸ் சிறுமியின் பெயர், புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டுள்ளது.

Archived link

அதில், “கடந்த 31-ம் தேதி மாயமான சிறுமி, 2-ம் தேதி கைகள் முறிக்கப்பட்ட நிலையிலும், விழிகள் வெளிவந்த நிலையிலும் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்”என்று இருந்தது.

ALIGARH 3.png

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் வேறு ஏதேனும் அப்டேட் உள்ளதா என்று தேடினோம். “போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றோ, உடலில் ஆசிட் ஊற்றப்பட்டது என்றோ பிரேத பரிசோதனை அறிக்கையில் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக ஐந்து போலீசார் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்”  என்று அலிகார் எஸ்.எஸ்.பி Akash Kulhari கூறியதைத் தாண்டி புதிதாக வேறு எந்த செய்தியும் இல்லை. இதன் மூலம் இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தவறானது என்று உறுதியாகிறது.

Archived link

மேலும், தொடர்ந்து வதந்தி பரவுவதைத் தடுக்க அலிகார் போலீஸார் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு உண்மை நிலவரம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

அதில்,

ஜஸ்டிஸ் ஃபார் ட்விங்கில்

2.6 வயது சிறுமி மே 31ம் தேதி கடத்தப்பட்டார். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் ஜூன் 2ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணை அடிப்படையில் ஜூன் 4ம் தேதி ஷாகித் மற்றும் அஸ்லம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமியின் தந்தை வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத விவகாரத்தால் இந்த கொலை நடந்துள்ளது தெரிகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மிக விரைவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.

என்று கூறப்பட்டுள்ளது.

Archived link

வேறு ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம், அப்போது சிறுமி மரணம் தொடர்பாக கோபத்தைத் தூண்டும் வகையில் தவறான தகவலைப் பரப்பியதாக 11 பேர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலிகார் போலீசார் தெரிவித்தது கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் கூறவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேர் என்பது தவறான தகவல்.

சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கதிர் நியூஸ், பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தி தவறு என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •