மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்து மதத்தினருக்கு சொந்தமானதா?
இந்தியாவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
"மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் பிராமினர்களுடையது" என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பெயர் பகிரப்பட்டுள்ளது. இதனுடன், சீனாவுக்கு ஒரு லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி கையெழுத்திட்டார் என்று அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவை, Chan Basha என்பவர் 2019 ஜூலை 15ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நான்கின் பெயரைப் பகிர்ந்துள்ளனர். வெறும் நான்கு பேர் மட்டும் ஏற்றுமதி செய்கிறார்கள் என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன, அவற்றின் உரிமையாளர்கள், முகவரி என்ன என்று ஆய்வு செய்தோம். அப்போது, இந்தியாவிலிருந்து மொத்தம் 56 நிறுவனங்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வது தெரிந்தது (இதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்தால் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்). அந்த பட்டியலும் நமக்கு கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது பெரும்பாலான பெயர்கள் இஸ்லாமியர்களுடையதாக இருந்தது. ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லிஸ்டை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருந்தது. எந்த இடத்திலும் பசு மாட்டு இறைச்சி என்று கூறவில்லை. எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பட்டியல் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். டாப் 10 மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் பட்டியலும் நமக்கு கிடைத்தது. டாப் 10 நிறுவனங்களின் பெயரை, நம்மிடம் இருந்த நிறுவனங்கள் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்தோம்… அவை அனைத்தும் இஸ்லாமியர்கள் நிறுவனமாகவே இருந்தது. அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நிறுவனங்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அல் கபீர் எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயர் முதல் பெயராகவே அதில் இருந்தது தெரிந்தது. அதன் இயக்குநர் சதீஷ் சபர்வால் என்று இருந்தது. அவரைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அந்த நிறுவனம் இஸ்லாமியர் ஒருவருடன் 50-50 கூட்டுறவில் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்று தெரிந்தது. இந்த நிறுவனம் மாட்டிறைச்சி, ஆடு, கோழி இறைச்சி, கடல் உணவுகளுடன் காய்கறி உள்ளிட்ட சைவ உணவுப் பொருட்களையும் ஏற்றுமதி செய்வது தெரிந்தது. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதியில் 45 முதல் 50 சதவிகிதம் வெஜிட்டேரியன் என்று சதீஷ் சபர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சபர்வால் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரா, அவர் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரா என்று ஆய்வு மேற்கொண்டோம். அதுபோல எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
தொடர்ந்து நாம் மாட்டிறைச்சி இறக்குமதி தொடர்பாக கூகுளில் தேடியபோது, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், மொத்தம் உள்ள ஏற்றுமதி அனுமதி பெற்ற 74 இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 10 இந்துக்களுடையது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அவர்களிடம் பேட்டியும் எடுத்து வெளியிட்டிருந்தனர். இறைச்சி ஏற்றுமதி செய்யும் 10 இந்துக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் ஒருவர். மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் அனைவரும் பொதுவாக கூறும் கருத்து, “மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதை ஒருவரின் தொழிலோடு இணைத்துப் பார்க்கக் கூடாது” என்பதுதான். பிபிசி செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள அல் கபீர் - சதீஷ் சபர்வால், அரேபியன் எக்ஸ்பேர்ட் பிரைவேட் லிமிடெட் - சுனில் கபூர், எம்.கே.ஆர் ஃப்ரோசன் புட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - மதன் ஏவட் ஆகிய பெயர்கள் உண்மைதான்… ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதற்கான ஆதாரம் இல்லை. அதே நேரத்தில், நமக்கு கிடைத்த இறைச்சி ஏற்றுமதியாளர்கள் பட்டியல் மற்றும் பிபிசி செய்தியில் பி.எம்.எல் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் - ஏ.எஸ்.பிந்ரா பற்றி எந்த குறிப்பும் இல்லை.
அடுத்ததாக, சீனாவுக்கு ஒரு லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி கையெழுத்திட்டாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். சீனாவுக்கு இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியாவது உண்மைதான். எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. ஆனால், ஒரு லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய மோடி கையெழுத்திட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில்,
இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பட்டியல் கிடைத்துள்ளது.
அவை பசு மாட்டிறைச்சி என்று குறிப்பிடாமல் எருமை மாட்டிறைச்சி என்றே குறிப்பிடுகின்றன.
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் டாப் 10 நிறுவனங்கள் பெயர் கிடைத்துள்ளது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டபடி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்பவர்கள் எல்லோருமே இந்துக்கள் இல்லை.
மொத்தம் உள்ள 74 இறைச்சி ஏற்றுமதியாளர்களில் 10 பேர் மட்டுமே இந்துக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை.
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதாகப் பிரதமர் மோடி சீனாவுடன் கையெழுத்திட்ட தகவல் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் செய்தி கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மேற்கண்ட பதிவில் குறிப்பிட்ட நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களை நடத்துவது இந்துக்கள்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்து வெளியிடப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான தகவலுடன் தவறான தகவல் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்து மதத்தினருக்கு சொந்தமானதா?
Fact Check By: Chendur PandianResult: Mixture