
தனது தந்தை மதம் மாறியதால் உயிரிழந்ததாகவும் தற்போது இந்து மதம் திரும்பியது நிம்மதியை அளிக்கிறது எனவும் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நான் இந்துவாக மாறியதும் அந்த ஏழுமலையானின் அருளும் தான் வேத மந்திரம் முழங்க முதல் கையெழுத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டி கண்ணீர்
ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, நான் இந்துவாக மாறியதும், ஏழுமலையானின் அருளும்தான் தான் முதல்வராக காரணம் என்று கூறியதாகவும், இந்துவாக மாறியதால் நிம்மதியாக இருப்பதாகவும் கண்ணீர் மல்கக் கூறியதாக tnnews24.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி, TNNews24 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 8ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இது இந்த நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி பாரம்பரிய கிறிஸ்தவக் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா காலத்திலேயே கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், கிறிஸ்தவத்தை மிகத் தீவிரமாக பின்பற்றும் குடும்பமாக தன்னுடைய குடும்பம் உள்ளது என்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் பாட்டியும் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அம்மாவுமான ஜெயம்மா 1999ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், “நான் மூன்று வயதில் கிறிஸ்தவராக இருக்கிறேன். வாரம் தவறாமல் எங்கள் குடும்பத்தினர் ஞாயிறு வழிபாட்டுக்கு சென்றுவிடுவோம்” என்று கூறியுள்ளார். ஏன் மதம் மாறினீர்கள் என்று கேட்டபோது, “இயேசுவே கடவுள் என்று கண்டுகொண்டோம். அதனால் கிறிஸ்தவத்துக்கு மாறினோம்” என்று அவர் கூறியுள்ளார். அந்த செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று தலைமைச் செயலகத்தில் அவர் முதல் கையெழுத்தை போடும் முன் புரோகிதர்கள் வேத மந்திரங்களை வாசித்தனர் , பின்னர் பேசிய அவர் ‘என் குடும்பம் கிருஸ்துவ மதத்திற்கு மாறினோம். அப்போது தான் என் தந்தை உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து எங்கள் குடும்பம் ஓரம் கட்டப்பட்டது. பல இன்னல்களை சந்தித்தோம்.பின்னர் நான் மீண்டும் இந்து மதம் திரும்பினேன்” என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக சொல்லப்பட்டு இருந்தது.
என் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினோம், அப்போது என் தந்தை உயிரிழந்தார் என்கிறபோது, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காலத்தில் மதம் மாறியது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அதாவது, கிறிஸ்தவ மதத்துக்கு சென்ற சிறிது நாட்களிலேயே ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர். ஆனால், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தாத்தா காலத்திலேயே அவர்கள் குடும்பம் கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர். அவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவம் சென்றதால் விமான விபத்தில் உயிரிழந்தார் என்று கூறியிருப்பது தவறானது.
சரி ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி மதம் மாறினாரா என்று தேடினோம். அப்போது, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. அதில், காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் உள்ளதா என்று கேட்கின்றனர். அதற்கு ஜெகன் மோகன், “நான் கடவுளை மிகவும் நம்புகிறேன். தினமும் பைபிள் படிக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த பேட்டி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. 11.16வது நிமிடத்தில் அந்த பேச்சு வருகிறது. அந்த வீடியோ கீழே…
ஜெகன் மோகன் ரெட்டி இந்து மதத்திற்கு மாறினாரா என்று தேடினோம். அப்போது, அவர் மதம் மாறியது தொடர்பாக பரவி வரும் வதந்தி உண்மையா என்று பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த கட்டுரைகளில், சங்கராச்சாரியார் ஒருவர் முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டி ஆற்றில் மூழ்கி வெளிவரும் படம் பகிரப்பட்டு இருந்தது. உண்மையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி கங்கையில் சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம் என்று நிரூபித்துள்ளன. அவர் மதம் மாறியதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் மதம் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பார்த்தசாரதியிடம் கேட்டபோது, “இயேசுவை முழுமையாக நம்புகிறவர் ஜெகன் மோகன் ரெட்டி. அதே நேரத்தில் மற்ற எல்லா மதத்தின் மீதும் மரியாதை அவருக்கு உண்டு. மக்களின் வேண்டுதலுக்காக அவர் கோவிலுக்கு செல்கிறார், பூஜை செய்கிறார். அதற்காக அவர் மதம் மாறிவிட்டார் என்று கூறுவது தவறு. இதுபோன்ற வதந்திகள் மிகவும் தவறானது, வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் அலுவலகம் வந்து கையெழுத்திட்டபோது பேட்டி ஏதும் அளித்தாரா என்று தேடினோம். அப்போது, இந்து செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், அன்றைய நிகழ்வு அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், காலை 8.49க்கு முதல்வர் அலுவலகம் வந்தார். அப்போது, மத்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மூன்று திட்டங்களுக்கு கையெழுத்திட்டார், அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு சென்றார் என்று கூறப்பட்டு இருந்தது. இந்து மதத்துக்கு திரும்பியதில் நிம்மதி என்று அவர் பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
முதன்முறையாக முதல்வர் அலுவலகம் வந்தது தொடர்பாக ஜெகன் மோகன் வெளியிட்ட ட்வீட்…
நாம் மேற்கொண்ட ஆய்வில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தாத்தா காலத்திலேயே அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்துள்ளது.
தங்களுடைய குடும்பம் மிகத் தீவிரமான கிறிஸ்தவ குடும்பம் என்று ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தாய் பேட்டி அளித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி இந்து மதத்துக்கு மாறியதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியிலும் தினமும் பைபிள் படிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர்தான் என்று அவருடைய கட்சி நிர்வாகி பேட்டி அளித்துள்ளார்.
டிஎன்நியூஸ்24 செய்தியில் கூறப்பட்டது போன்று எந்த ஒரு பேட்டியும் ஜெகன் மோகன் ரெட்டி அளிக்கவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி “இந்து மதத்துக்கு மாறியது நிம்மதி அளிக்கிறது” என்று பேட்டி அளித்ததாக டிஎன்நியூஸ்24 வெளியிட்ட செய்தி பொய்யானது, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
டிஎன் நியூஸ்24 இணையதளம் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது என்று பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஎன் நியூஸ் 24 ஃபேஸ்புக் பக்கத்தில் ஊடகத்தின் பெயருக்கு கீழ் “துணிந்து சொல்” என்று ஸ்லோகன் உள்ளது. துணிந்து உண்மையை சொல் என்பது இவர்கள் தவறாக புரிந்துகொண்டு துணிந்து பொய் சொல்கிறார்களோ என்று எண்ணம் தோன்றுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டதாகக் கூறும் செய்தியால் சர்ச்சை
Fact Check By: Praveen KumarResult: False
