
நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று தமிழ் ஊடகங்கள் போட்டிப் போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Article Link | Archived Link |
“ரகசியமாக நடந்த அமலா பாலின் இரண்டாவது திருமணம்: வைரல் புகைப்படம்!” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழ் சமயம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.

Facebook Link | Archived Link 1 | Article Link | Archived Link 2 |
தமிழ் தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் “மும்பை பாடகரை மணந்த அமலாபால்: சில மணித்துளிகளில் இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகை அமலா பால் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணம் பற்றி அமலா பாலிடம் கேட்ட போது, “திருமணத்துக்கு இன்னும் காலம் உள்ளது. தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். என் காதல், திருமணம் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்” என்றார். இந்த நிலையில் அமலா பால் இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமயம் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், “அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. பவணீந்தர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டார், ஆனால் சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார். சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவிவிட்டது. அவர்கள் இருவரும் ஏற்கனவே லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமணமும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
எந்த இடத்திலும் அமலா பால் பவணீந்தர் சிங் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் திருமணம் முடிந்துவிட்டது என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளனர்.
தி இந்து தமிழ் வெளியிட்ட செய்தியில் “இதனிடையே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது. ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Dinamalar | Archived Link |
தினமலரில், “அமலாபாலும், பவ்னிந்தர் சிங்கும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன. இதன் மூலம் அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
திருமணம் என்றால் குடும்பத்தினர், நண்பர்கள் என்று யாராவது அருகில் இருப்பார்கள். ஆனால், இந்த புகைப்படங்களில் அப்படி யாருமே இல்லை. அமலா பாலும் பவ்னிந்தர் சிங் மட்டுமே உள்ளனர். பார்க்க போட்டோஷூட் போல உள்ளது.
எனவே, இந்த தகவல் உண்மையா என்று கண்டறிய தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ ஒருவரின் உதவியை நாடினோம். அவர், “காலையில் இருந்து இந்த வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவர் போட்டதால் மற்ற ஊடகங்களும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டு வருகின்ற. இந்த தகவல் தவறானது என்று அமலா பால் மேனேஜர் தெரிவித்துள்ளார்” என்றார்.

vikatan.com | Archived Link 1 |
toptamilnews.com | Archived Link 2 |
தொடர்ந்து தேடியபோது விகடனில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ” மும்பை பாடகர் பாவ்னிந்தர் சிங் உடன் அவர் திருமண செய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இந்தப் புகைப்படம் இன்ஸ்டாவிலிருந்து நீக்கப்பட்டது. செய்திகள் பலவற்றில் அமலாபாலுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் வந்த நிலையில், அமலா பால் மேனேஜர் தரப்பில் இதைப் பற்றி விசாரித்த போது, ‘’இந்தத் திருமணம் பற்றி வந்துகொண்டிருக்கும் செய்தி தவறு. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என்று தெரியவில்லை. திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தனர். மேலும் சில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.
நம்முடைய ஆய்வில்,
திருமணம் முடிந்துவிட்டது என்று அமலா பாலோ பவ்னிந்தர் சிங்கோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பவ்னிந்தர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவை ஒரு சில நிமிடங்களில் அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, அவர் அதில் என்ன குறிப்பிட்டார் என்று கண்டறிய முடியவில்லை.
நெட்டிசன்கள் வாழ்த்து கூறியதை அடிப்படையாக வைத்து, அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
திருமணம் நடைபெறவில்லை… இந்த தகவல் தவறானது என்று அமலா பால் மேனேஜர் உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமலா பால் இரண்டாவது திருமணம்?- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: False
