அமித்ஷாவுக்கு புற்றுநோயா? ஃபேஸ்புக் வதந்தி

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கருத்துக்களுடன் “Chondrosarcoma என்பது நாய்களுக்கு வரும் எலும்பு புற்றுநோய். அரிதாகத்தான் மனிதர்களுக்கு வருமாம். அதுவும் இடுப்பு எலும்பில் வந்தால் கடுமையான வேதனை இருக்குமாம். அமெரிக்கா-டெக்சாசில் உள்ள எம்.டி ஆண்டர்சன் கேன்சர் மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தும் போகமுடியாத நிலையாம். பாவம் யாருக்கும் இதுபோன்ற நோய் வரக்கூடாதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை அறிவோம்:

ஆம் ஆத்மி ஆதரவாளரான விஜயலட்சுமி நாடார் என்பவர் அமித்ஷாவுக்கு புற்றுநோய் என்று வதந்தி பரப்பியதாக பா.ஜ.க ஐ.டி-விங்கைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டை கூறினர். ஆனால், விஜயலட்சுமி நாடார் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்படி ஒரு பதிவு இல்லை. அதே நேரத்தில் பா.ஜ.க-வினர் தன்னைப் பற்றி பதிவிட்டு தன்னை வெளிஉலகில் அடையாளப்படுத்தி வருகின்றனர் என்று அவர் கூறிய பதிவுகள் மட்டுமே கிடைத்தன. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் அமித்ஷாவுக்கு Chondrosarcoma நோய் என்று குறிப்பிட்டிருந்தனர். அது என்ன என்று பார்த்தபோது மிக அரிதாக ஏற்படக்கூடிய எலும்பு புற்றுநோயில் ஒரு வகை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை மூலமாக புற்றுநோய் பாதிப்பு உள்ள பகுதியை அகற்றுவதே நல்ல தீர்வை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். ரேடியேஷன், கீமோதெரப்பி சிகிச்சைகள் பெரிய அளவில் பலன் அளிக்காது என்று குறிப்பிட்டிருந்தனர். 

ஒரு பேச்சுக்கு அமித்ஷாவுக்கு உடல்நலக் குறைவு என்றால் அவருக்கு இந்தியாவில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கும். நோய் தீவிரமாகட்டும் அதுவரை காத்திருப்போம் என்று இருக்க முடியாது. அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவுக்குத்தான் செல்ல வேண்டும் என்றாலும் அமித்ஷாவுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அல்லது, இந்தியாவிலேயே குறைந்தபட்சம் ரேடியேஷன், கீமோதெரப்பியாவது அளித்திருப்பார்கள்.

ஆனால், அமித்ஷா ஆரோக்கியமாக துறை சார்ந்த கலந்துரையாடல் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகிறார். அமைச்சரவைக் கூட்டம், மாநில முதல்வர்களுடனான பிரதமரின் சந்திப்பு என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கீமோ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு சோர்வு, முடி உதிர்வு, ரத்தக் கசிவு. நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிப்பு, ரத்த சோகை, வாந்தி, குமட்டல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். ஆனால், சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது அமித்ஷாவுக்கு அப்படி எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. 

தான் ஆரோக்கியமாக உள்ளேன் என அமித்ஷா அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும், எந்த ஒரு தயக்கமுமின்றி அமித்ஷா உடல் நலம் தொடர்பான பதிவுகளை நீக்காமலும் புதிதாக பகிர்ந்தும் வருகின்றனர். அமித்ஷா உடல் நலம் பற்றி பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், தான் நலமாக இருப்பதாக அமித்ஷா கூறியதாக குறிப்பிட்டு இருந்தனர்.

ndtv.comArchived Link 1
zeenews.india.comArchived Link 2

அமித்ஷாவின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் தன்னுடைய உடல் நலம் பற்றி அமித்ஷா வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர்.

இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. நாட்டின் உள்துறை மந்திரி என்ற வகையில், நான் இரவு நீண்ட நேரம் வரையிலும், எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இதில் கவனம் செலுத்தவில்லை. இது என் கவனத்துக்கு வந்தபோது, இப்படி வெளியிட்டவர்கள் வேண்டுமானால் தங்கள் கற்பனை இன்பத்தை அனுபவிக்கட்டும் என அனுமதிக்க நினைத்தேன். அதன் காரணமாக நான் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் எனது கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களும், என் நலம் விரும்பிகளும் கடந்த 2 நாட்களாக தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர். எனவே இன்று நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு நோயும் இல்லை. இந்து மத நம்பிக்கைகள் படி, இத்தகைய வதந்திகள் ஒரு நபரை ஆரோக்கியம் ஆக்குகின்றன. எனவே இந்த வதந்திகளை பரப்பியவர்கள் இதை ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் சொந்த வேலையை மனதில் கொள்வார்கள், என்னையும் என் வேலையை செய்ய விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Archived Link

என் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, விசாரித்த கட்சி தொண்டர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மீது எனக்கு எந்த தவறான உணர்வுகளும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் அமித்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு புற்றுநோய் என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அமித்ஷாவுக்கு புற்றுநோயா? ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False