
‘’அழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகர்கள்,’’ எனும் தலைப்பில் நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளையின் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’பணம்தான் முக்கியம் எ ன்று அழகைக் கூட பார்க்காமல் அசிங்கமான நடிகர்களை திருமணம் செய்த நடிகைகள்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியின் உள்ளே வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளனர். அந்த வீடியோ இணைப்பும் கீழே தரப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பு, கவர் புகைப்படம் மற்றும் அதில் உள்ள கன்டென்ட் அனைத்துமே தவறான விசயமாகும். அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அழகு, பணம் பற்றியோ லைக் வாங்குவதற்காக கேலி செய்யும் தொனியில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பணத்திற்காக அசிங்கமான நடிகர்களை திருமணம் செய்த நடிகைகள் என்ற தலைப்பை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அழகு, அசிங்கம் என எதை வைத்து அளவீடு செய்து, இந்த வீடியோ செய்தியை தயாரித்திருக்கிறார்கள் என்று யோசித்தால் வேதனையே மிஞ்சுகிறது. அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மிக மோசமாக விமர்சிப்பதாக இது உள்ளதென்று, நம்மிடம் பேசிய சினிமாத்துறை நண்பர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
அதன் அடிப்படையிலேயே இந்த செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதில், கவர் புகைப்படத்தில் கவுசல்யா, முத்துக்காளை புகைப்படத்தை இணைத்துள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே அல்லது இதுதொடர்பான வீடியோவின் உள்ளேயும் எந்த இடத்திலும் அவர்களை பற்றி கூறவில்லை.
நடிகர் கொட்டாச்சி, பக்ரூ, கஞ்சா கருப்பு, யோகி பாபு ஆகியோரின் திருமண புகைப்படங்களையும், அதுபற்றிய குறிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
எனவே, சம்பந்தம் இன்றி முத்துக்காளை, கவுசல்யாவின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டு, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
மேலும், கவுசல்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல்தான் உள்ளார். அவரது திருமணம் பற்றி ஏற்கனவே சர்ச்சை செய்தி வெளியான நிலையில் அதற்கும் உரிய விளக்கமும் அளித்திருக்கிறார்.
இதேபோல, நடிகர் முத்துக்காளை திருமணம் செய்த பெண் வேறொருவர் ஆவார்.

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ‘அசிங்கமான நடிகர்களை பணத்திற்காக திருமணம் செய்த நடிகைகள்,’ எனக் குறிப்பிட்டுள்ளது மிக தவறான முன்னுதாரணமாகும்.
2) நடிகை கவுசல்யா திருமணம் ஆகாதவர். அவரது புகைப்படத்தை நடிகர் முத்துக்காளையுடன் இணைத்து பகிர்ந்துள்ளது வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
3) நடிகர் முத்துக்காளை பற்றியோ, கவுசல்யா பற்றியோ குறிப்பிட்ட இணையதள செய்தி மற்றும் அதன் வீடியோவில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இதுபோன்ற சந்தேகத்திற்கு இடமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு எழுதி அனுப்புங்கள்.

Title:நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளை புகைப்படத்தை இணைத்து பகிரப்படும் செய்தியால் குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: False Headline
