1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Savarkar 2.png
Facebook LinkArchived Link

இந்தியா டுடே ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், "வீர சாவர்க்கர் இன்றி 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது - அமித்ஷா" என்று தலைப்பிட்டிருந்தனர். இதன் கீழ், சாவர்க்கரின் விக்கிப்பீடியா பதிவு படத்தை வைத்துள்ளனர். அதில் சாவர்க்கர் 1883ம் ஆண்டு பிறந்தார் என்பது வட்டமிட்டும் அடிக்கோடிட்டும் காட்டப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், "உலகத்திலேயே தான் பிறப்பதற்கு முன் போராடிய ஒரே போராளி சாவர்க்கர் தான். அரிச்சந்திரன் பரம்பரை அமித்ஷா சொன்னது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Zunaith Ansari என்பவர் 2019 டிசம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவில், இந்தியா டுடே செய்தி, விக்கிப்பீடியா பதிவை இணைத்து கொடுத்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பு "வீர சாவர்க்கர் இன்றி, 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது: அமித்ஷா" என்று உள்ளது. அந்த செய்தியை கூகுளில் தேடி எடுத்தோம். அதில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. "வீர சாவர்க்கர் இல்லை என்றால், 1857ம் ஆண்டு நடந்த கலகம் வரலாறு ஆகியிருக்காது. நாம் அனைவரும் அதை பிரிட்டிஷ்காரர்கள் பார்வையில் கலகமாகவே பார்த்தோம். ஆனால், 1857ல் நடந்த அந்த கலகத்தை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று பெயரிட்டு அழைத்தவர் வீர சாவர்க்கர்தான்" என்று இருந்தது.

Savarkar 3.png
indiatoday.inArchived Link 1
thehindubusinessline.comArchived Link 2
outlookindia.comArchived Link 3

முழு பேச்சு பற்றிய தகவல் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தோம். அப்போது ஏ.என்.ஐ நிறுவனம் வெளியிட்ட அமித்ஷா பேச்சின் வீடியோவும், தமிழில் தினமலர், இந்து தமிழ் என பல ஊடகங்களில் அமித்ஷா பேச்சு தொடர்பாக வெளியான செய்தியும் கிடைத்தன. இந்து தமிழில் வெளியான செய்தியில், "வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால் 1857-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திர போர் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பார்வையில் தான் பதிவாகி இருக்கும். அவ்வாறு தான் நமக்கும் தெரிந்து இருக்கும். முதல் இந்திய சுதந்திர போர் என்ற வார்த்தையைக் கூறியவர் சாவர்க்கர் தான். இல்லையென்றால் நமது குழந்தைகள் பிரிட்டிசாருக்கு எதிரான கலகம் என்றே எண்ணியிருப்பார்கள். யாரையும் புண்படுத்தாமல் இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் மீண்டும் எழுத வேண்டும். இங்குள்ள வரலாற்று அறிஞர்களிடம் இதனைக் கேட்டுக் கொள்கிறேன். நமது வரலாற்றை எழுதுவது நமது கடமை" என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Savarkar 4.png
dinamalar.comArchived Link 1
hindutamil.inArchived Link 2

இதன் மூலம், 1857ல் நடந்த கலகத்தில் சாவகர்க்கர் பங்கேற்றார் என்றோ, அதற்குக் காரணமாக இருந்தார் என்றோ எந்த இடத்திலும் அமித்ஷா கூறவில்லை, 1857ல் நடந்த கலகத்தை முதல் சுதந்திரப் போராட்டம் என்று பெயர் வைத்தார் என்று மட்டுமே அமித்ஷா கூறியது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் எந்த இடத்திலும் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று பெயர் வைத்து அழைத்தது சாவர்க்கர்தான் என்று அமித்ஷா கூறியதை மாற்றித் திரித்துக் கூறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தான் பிறப்பதற்கு முன்பே போராடிய ஒரு போராளி சாவர்க்கர் என்று அமித்ஷா கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:1857 சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False