அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரின் அருகே, நம் சமுதாயத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் திரு ராசு வன்னியர் அவர்களின் பெயரை ஒரு வதிவிடத்திற்கு சூட்டியுள்ளது கலிபோர்னியா மாகாண அரசு. ராசு வன்னியர் ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியின் போது, தன் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் இதர கலிபோர்னியா நிறுவனக்ளின் தயாரிப்புகளை தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு விற்று, அந்த மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்பெற செய்தவர். இந்த சாதனைகளுக்காக அவர் பெயரை சூட்டி கவுரவித்துள்ளது கலிபோனியா மாகாண அரசு. நம் ரத்தத்தின் சாதனைகளை ஷேர் செய்யுங்கள் சொந்தங்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதிக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கு செய்தி ஆதாரம் எதையும் வழங்கவில்லை. சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையை மட்டும் வழங்கியுள்ளனர். உண்மையில் இப்படி ஏதும் பெயர் சூட்டப்பட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மக்கள் வசிக்கும் பகுதிக்கு ராசு வன்னியர் என்று சூட்டப்பட்டா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி ஏதும் பெயர் சூட்டப்பட்டதாகச் செய்தி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தெருவுக்கு ஏதும் இந்தியர் பெயர் சூட்டப்பட்டதா எனத் தேடிப் பார்த்தோம். அப்படியும் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு ஊரின் பெயரையே மாற்றியிருந்தால் அது தொடர்பாக செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

ராசு வன்னியர் என்று பெரிய தொழிலதிபர் யாராவது கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்களா, அவர்களைப் பற்றி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. உண்மையில் அப்படி ஒரு தொழிலதிபர் இருந்திருந்தால், பொருளாதாரத்தை மீட்க உதவியிருந்தால் நிச்சயம் அது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கும். ஆனால் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: historicpca.blogspot.com  I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலிருந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அதன் உண்மையான படம் நமக்கு கிடைத்தது. 2015ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே இந்த படத்தை பலரும் தங்கள் பிளாக், சமூக ஊடக பதிவுகளில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், ராசு வன்னியர் என்று இருந்த இடத்தில் “Sacramento” என்று இருந்தது.  சேக்ரமென்டோ என்பது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். கலிஃபோர்னியா மாகாணத்தின் தலைநகரான சேக்ரமெண்டோவின் பெயரை ராசு வன்னியர் என்று மாற்றியதாக இவர்கள் தவறாகக் குறிப்பிட்டிருப்பது தெளிவானது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தலைநகரம் சேகரமெண்டோ, பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி படத்தை எடிட் செய்து, லாஸ்ஏஞ்சல்ஸ் அருகே உள்ள ஊர் ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள ஒரு ஊரின் பெயரை ராசு வன்னியர் என்று அந்நாட்டு அரசு மாற்றியதாக பரவும் தகவல் உண்மையில்லை, இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False