
போலீஸ் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் உள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived link 1 | Archived link 2 |
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் ஒருவர் உள்ள புகைப்படம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் போல இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “போலீஸ் உடையில் RSS ஆட்கள்….உங்களுடைய நேம் பேட்ஜ் எங்க என்று கேட்பதற்கு கீழே விழுந்து விட்டது என்கிறான். எல்லா போலீஸோட பேட்ஜ்மா என்று கேட்க வேகமாக கடந்து செல்லுகிறான்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Abubakkar Siddiq என்பவர் டிசம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்த்தோம். அதில் உள்ள போலீஸ் அதிகாரியின் தோள்பட்டையில் டி.பி என்று பட்டைகளுடன் மூன்று நட்சத்திரங்கள் இருந்தன. இதன் மூலம் இவர் டெல்லியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பது தெரிகிறது. இவரையும் ஓம் பிர்லாவுடன் உள்ளவரையும் பார்க்கும்போது கிட்டத்தட்ட உருவ ஒற்றுமை ஒன்றாக இருப்பது போல தெரிகிறது. ஆனால், இருவருக்கும் மெல்லிய வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. போலீஸ் அதிகாரிக்கு மூக்கு கூராக இருக்கிறது. ஆனால், ஓம் பிர்லாவுடன் இருப்பவருக்கு கொஞ்சம் தட்டையாக தெரிகிறது.
இவர் யார் என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல மாதங்களாக ஓம் பிர்லா ஆர்.எஸ்.எஸ் அரைக்கால் சட்டையுடன் இருக்கும் இந்த புகைப்படம் பல செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. ஆனால், ஓம் பிர்லாவுடன் இருப்பவர் யார் என்று அதில் சரியான தகவல் இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அசோக் டோக்ரா என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.

Search Link 1 | Search Link 2 |
ராஜஸ்தானில் அசோக் டோக்ரா என்று எம்.எல்.ஏ யாராவது இருக்கிறார்களா என்று கூகுளில் டைப் செய்தபோது, அப்படி ஒரு ஃபேஸ்புக் ப்ரொஃபைல் நமக்கு கிடைத்தது. அதை ஓப்பன் செய்து பார்த்தபோது, ஓம் பிர்லாவுடன் இருந்தது அசோக் டோக்ரா என்பது உறுதியானது.

அடுத்ததாக இவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு சென்றாரா என்று தேடினோம். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி மற்றும் இந்திப் பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரி வினோத் நாரங்கைத் தொடர்புகொண்டு பேசி, ஆர்.எஸ்.எஸ் சீருடையில் இருப்பது அவர் இல்லை என்று உறுதி செய்தது தெரிந்தது.
அந்த செய்தியைப் பார்த்தோம். அதில் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி டெல்லி கென்னட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்றும், தான் ஆர்.எஸ்.எஸ் அல்லது வேறு எந்த ஒரு அமைப்புடனும் தொடர்புகொண்டவன் இல்லை என்றும், தன்னுடைய படத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று அவர் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஒரு படத்தையும் அனுப்பியிருந்ததாகவும் அதனை ஒப்பிட்டு உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் அவரது ட்விட்டர் ப்ரொஃபைலையும் கண்டறிந்திருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,
ஓம் பிர்லாவுடன் இருப்பது ராஜஸ்தான் எம்.எல்.ஏ அசோக் டோக்ரா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி டெல்லி கென்னட் பிளேசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் வினோத் நாரங் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஓம் பிர்லாவுடன் இருந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்தான் டெல்லியில் இன்ஸ்பெக்டர் வேடம் போட்டுள்ளார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி?- ஃபேஸ்புக் வைரல் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False

Hi,I didt shared this stories in my page. And you said 30 min before I shared.last 2hours I didt used face book.could you send exact time and date I shared