ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

சமூக ஊடகம்

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர் என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதேபோல, மற்றொரு பதிவில், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரியை திருப்பி தாக்கிய டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு என்றும் மற்றொரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இவ்விரு பதிவுகளும் ஒரே செய்தி பற்றியவை என்பதால், இவற்றின் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:
…சற்றுமுன் அதிகமாக பகிரவும் ப்ளீஸ்… ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்..! ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் – லோடு ஆட்டோ டிரைவர் இடையே மோதல் – கட்டிப்புரண்டு சண்டை சரக்கு வாகன ஓட்டுநர், ஆய்வாளரின் கழுத்தில் கடித்து வைத்ததால் ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கேனிக்கரை சந்திப்பில் அனைத்து ஆவணங்களும் இருந்ததால் லஞ்சம் கொடுக்க மறுத்த வேன் ஓட்டுநருக்கு சரமாரியாக அடி உதை. போக்குவரத்து காவல் ஆய்வாளர் – லோடு ஆட்டோ டிரைவர் இடையே மோதல். காவலரை பொரட்டியெடுத்த ஓட்டுநர்

Archived Link

…டிரைவர் பேசிகொண்டு இருக்கும்போதே வரம்பு மீறி சட்டையை பிடித்து இழுத்து தாக்கிய #டிராபிக்_போலீஸ்_அதிகாரி!!! பாதிக்கப்பட்ட டிரைவர்!!! திருப்பி தாக்கியதால் #5பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!!! ஒருத்தரை சொந்த ஊரிலே ரோட்ல விட்டு அடிச்சா திருப்பி அடிக்காம!!! கெஞ்சுவானா??? #தமிழக_ஓட்டுநர் சங்கம் மாநிலம் முழுவதும் பந்த் நடத்த வேண்டும்!!! வர வர #தமிழ்நாடு ஏழைகளுக்கு எதிரான நாடாக மாறி வருகிறது!!!

Archived Link

இதில், போலீசாரும், டிரைவரும் அடித்துக் கொள்ளும் வீடியோ பதிவு, மே 15ம் தேதியும், 2வது பதிவு மே 16ம் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விரு பதிவிலும், இருப்பவர் ஒரே டிரைவர்தான். இந்த பதிவுகள், வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

உண்மை அறிவோம்:
இந்த 2 பதிவுகளிலும் குறிப்பிடுவதன் படி, இச்சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றதாக தெரிகிறது. இதையடுத்து, கூகுள் சென்று, இத்தகைய செய்தி எதுவும் கடந்த வாரத்தில் நடைபெற்றதா என தேடிப் பார்த்தோம். அதில், இதுதொடர்பான செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\ramanathapuram 2.png

இந்த செய்திகளைப் படித்தபோது, ராமநாதபுரம் பஜார் பகுதியில், கடந்த மே 15ம் தேதியன்று, போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையிலான போலீசார் டிராபிக்கை சீர்செய்து வந்துள்ளனர். அப்போது, ஒரு டாடா ஏசி வாகனம் லோடு ஏற்றிக் கொண்டு, அங்கே நிற்காமல் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், விஜயகாந்த், அந்த வாகனத்தின் டிரைவரை தாக்கியதாகவும், அதில் ஆத்திரமடைந்த டிரைவர் போலீஸ் என்றும் பாராமல் உடனே திருப்பி தாக்கி, அவரது கழுத்தில் கடித்ததாகவும் தெரியவருகிறது. இதில், காயமடைந்த போலீஸ் அதிகாரி விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, தெரிகிறது. இதுபற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கேயும், ஒன் இந்தியா இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கேயும் கிளிக் செய்யுங்கள். இது போலீஸ் தரப்பில் கூறப்பட்டதை அப்படியே வெளியிடப்பட்ட செய்தியாகும்.

அதேசமயம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவுகளில், போலீசாருக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. போலீசார் லஞ்சம் கேட்டு அடித்ததால், டிரைவர் திருப்பி அடித்தார் என்றும் டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். ஆனால், ஊடகச் செய்திகளிலோ, டிரைவர் தப்பு செய்ததால்தான், போலீஸ் ஆய்வாளர் அத்துமீறினார் என்றும், டிரைவர் மீது 3 பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பவம் நடைபெற்றது உண்மைதான், ஆனால், அதன் உண்மை என்ன என்று தெளிவுபடுத்த போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. மேலும், இதுதொடர்பான, எஃப்ஐஆர் பதிவு எண் நாம் பலமுறை முயற்சித்தும் கிடைக்காத காரணத்தால், இத்தகவலில் உண்மை பாதி, பாதி தெளிவற்ற தகவல்கள் கலந்துள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.     

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் குறிப்பிடப்படும் சம்பவம் உண்மைதான். ஆனால், அதுபற்றி கூறப்படும் விவரத்தை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை. எனவே, இதில் உண்மை பாதி, தெளிவற்ற தகவல்கள் பாதி கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

Fact Check By: Parthibans S 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •