
‘’மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். விவரம் இதோ உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பேட்டி தர, வீடியோவில் பாஜக பிரமுகர் ஒருவரையும், ஆயுதங்கள் பலவற்றையும் காட்டுகிறார்கள். இதுவரை 19 ஆயிரம் பேர் இதனை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் யாரேனும் பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என தேடிப் பார்த்தோம். கூகுளில் தேடியபோது, இது உண்மையான வீடியோதான் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் கிடைத்தன.

இதில், டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி இணைப்பை திறந்து பார்த்தோம். அதில், மேற்கண்ட வீடியோ செய்தி உண்மைதான் என உறுதிப்படுத்தும் தகவல்கள் கூறப்பட்டிருந்தன. ஆம். மத்தியப் பிரதேச மாநிலம், செந்த்வா பகுதியை சேர்ந்த சஞ்சய் யாதவ் என்ற பாஜக பிரமுகர் வீட்டில் இருந்துதான் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இத்தகைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 17 பெட்ரோல் குண்டுகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 துப்பாக்கிகள் மற்றும் 110 புல்லட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன்பேரில், சஞ்சய் யாதவ், உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். சஞ்சய் யாதவ் மீது ஏற்கனவே, 40க்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, என்டிடிவி வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் சீனியர் போலீஸ் அதிகாரி யான்சென் தோல்கர் பூட்டியா. இவரது தலைமையில்தான் மேற்கண்ட போலீஸ் சோதனை நடைபெற்றது. எனவே, இந்த வைரல் வீடியோ செய்தி உண்மைதான் என தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், பாஜக., தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் என்ற தலைப்பின் காரணமாக, இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.

Title:பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்: ஃபேஸ்புக் வைரல் செய்தி
Fact Check By: Parthiban SResult: True
