
‘’மு.க.ஸ்டாலினை விமர்சித்த நடிகர் கவுண்டமணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நடிகர் கவுண்டமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’கவுண்டர் உள்குத்து வச்சுத்தான் வாழ்த்து சொல்றாரு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட ட்வீட்டில், ‘’தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் @mkstalin முன்பு செய்த தவறுகளை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று முடிந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியமைக்க உள்ளது. இந்த சூழலில், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் கவுண்டமணி அவருக்கு வாழ்த்து கூறியதாகவும், அத்துடன், சென்ற முறை செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள் என அறிவுரை கூறியதாகவும் குறிப்பிட்டு, மேற்கண்ட ட்வீட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மையில், இது நடிகர் கவுண்டமணியின் ட்விட்டர் ஐடிதானா என்ற சந்தேகம் நமக்கு எழவே, இதுபற்றி சினிமா செய்தியாளர்கள் மற்றும் பிஆர்ஓ வட்டாரங்களில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய நண்பர்கள் பலரும், ‘’நடிகர் கவுண்டமணி, சமூக வலைதளங்களில் எந்த ஐடியும் கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அவர் வைத்திருந்தால், அது கண்டிப்பாக வெரிஃபைடு செய்து, வெளிப்படையான அறிவிப்பும் தரப்பட்டிருக்கும். இந்த ட்வீட்டை அவர் வெளியிட்டிருக்க வாய்ப்பே இல்லை,’’ என்றனர்.
ட்விட்டரில், கவுண்டமணி பெயரில் நிறைய ஐடி.,கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவை எதுவுமே வெரிஃபைடு இல்லை.

இதில், ஒரு ஐடிதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவையும் வெளியிட்டிருந்தது.
https://twitter.com/itisGoundamani/status/1388836491493789698
ஆனால், இந்த ஐடி வெரிஃபைடு எதுவும் கிடையாது. கவுண்டமணி மட்டுமல்ல, நிறைய நடிகர்களின் பெயரில் இப்படி ட்விட்டரில் போலி ஐடிகள் தொடங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

இந்த குறிப்பிட்ட ஐடி, கடந்த 2019 செப்டம்பரின் தொடங்கப்பட்டு, ஏப்ரல் 14, 2021 தொடங்கி, இதுவரை ஒருசில பதிவுகளையே வெளியிட்டிருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு எந்த நாளில் வருகிறது என்பதே சர்ச்சையாக உள்ள தமிழ்நாட்டில், கவுண்டமணி இப்படி வெளிப்படையாக, தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறியிருப்பாரா என்பதெல்லாம் மிகவும் சந்தேகம்தான். அதேபோல, நடிகர் விவேக் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து, எழுத்துப் பிழைகளுடன் ட்வீட் வெளியிடப்பட்டிருக்கிறது, #RIPVivekSir என்று. நடிகர் கவுண்டமணிக்கு விவேக் வயதில் சிறியவர் என்பதால், இப்படி கூற வாய்ப்பே இல்லை.

இப்படி நிறைய சந்தேகங்கள் குறிப்பிட்ட ட்விட்டர் ஐடி மீது நமக்கு உள்ளது. தவிர, சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கவுண்டமணியை சந்தித்தாகக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். கவுண்டமணிக்கு ட்விட்டர் ஐடி இருந்தால், அவரை டேக் செய்தே வெளியிட்டிருப்பார். ஆனால், அப்படி செய்யாமல் # பயன்படுத்தி, கவுண்டமணி பெயரை பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, இணையத்தளங்களில் கிடைக்கும் கவுண்டமணி தொடர்பான புகைப்படங்களை எடுத்து, ஒரு போலி ட்விட்டர் ஐடியை தொடங்கி, மேற்கண்ட ட்வீட்டை வெளியிட்டு குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல விமர்சித்தாரா கவுண்டமணி?- போலி ட்வீட்டால் சர்ச்சை
Fact Check By: Pankaj IyerResult: False
