ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

அரசியல் சமூக ஊடகம்

“ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் நான் பொய் சொன்னேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

ராகுல் காந்தி கண்ணடிக்கும் படத்துக்கு அருகே, மன்னித்து விடுங்கள் என்று மிகப்பெரிய தலைப்பிட்டுள்ளனர். அதில், “ரஃபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரசார வேகத்தில் அப்படி பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” – ராகுல் காந்தி என்று உள்ளது.

ஏப்ரல் 22ம் தேதி இந்த பதிவை பிஜேபி கன்னியாகுமரி என்ற குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஷேரும் காங்கிரஸ் அடிமைகளுக்கு கொடுக்கப்படும் செருப்படி என்று எதிர்தரப்பினர் மீது வன்மத்தைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரஃபேல் விவகாரத்தில் பா.ஜ.க ஊழல் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தி பேசி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பொய்யான தகவலை அளித்து வருவதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

ரஃபேல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். ஆனால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்தது என்று இந்து பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ரஃபேல் விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கை ஏற்பதாக அறிவித்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால், “உச்ச நீதிமன்றமே காவலனைத் திருடன்” என்று கூறிவிட்டது என்று மோடியைப் பற்றி தேர்தல் பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி. இதை எதிர்த்து பா.ஜ.க-வை சார்ந்த மீனாட்சி லேகி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த வழக்கில், நான் பேசியதன் அர்த்தம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. அப்போது பா.ஜ.க-வின் மீனாட்சி லேகி சார்பில் ஆஜரான, முகுல் ரோஹத்கி “நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு ’காவலனே ஒரு திருடன்’(Chowkidar Chor hai) என்று பேசியதற்கு ராகுல் காந்தி இதுவரையில் மன்னிப்பு கேட்கவில்லை. சட்டத்தின் பார்வையில் வருத்தம் தெரிவிப்பது என்பது மன்னிப்பு கேட்பது ஆகாது’ என்று தெரிவித்தார்.

“தன்னை குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது என்று மோடி கூட இப்படி செய்துள்ளார். ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்துவிட்டதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று ராகுல் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்கி கூறினார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இரு தரப்பினரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு படி, ராகுல் காந்தி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் தெரிவித்தது திரித்துக் கூறப்பட்டுள்ளது. எனக்கு அரசியல் லாபத்திற்காக நீதிமன்றத்தை இழுக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது. நான் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால், மன்னிப்பு கேட்பதாக கூறவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ரஃபேல் விவகாரத்தில் பொய் சொன்னேன்… அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என்று ராகுல் காந்தி கூறவே இல்லை. காவலன் திருடன் என்று கூறியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். தன்னுடைய கருத்தில் அவர் உறுதியாக உள்ளார் என்பது ஏப்ரல் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெளிவாகிறது.

இது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகப் பகிரப்பட்ட பதிவு என உறுதியாகிறது.

முடிவு

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •