
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ASAT செயற்கைக்கோளில் என்ன இருக்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. சமீபத்தில் இந்தியா செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக, நடத்தியது. ஆனால், இதில் செயற்கைக்கோள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
செய்தியின் விவரம்
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ASAT செயற்கைக்கோளில் அப்படி என்ன இருக்கிறது. | Tnnews24
சமீபத்தில் இந்தியா நடத்திய செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தால் அண்டை நாடுகள் அச்சம் அடைந்துவிட்டதாக, இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு செயற்கைக்கோளில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன இருக்கிறது என்று கேள்வியுடன் பதிவிட்டுள்ளனர். நாட்டின் ஆற்றலை வெளிப்படுத்தும் செய்தி என்பதாலும் மிஷன் சக்தி செயற்கைக்கோளின் சிறப்புக்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்று எண்ணியும் பலர் இதை ஷேர் செய்திருந்தனர். மிஷன் சக்தி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளான மார்ச் 28ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
கடந்த மார்ச் 27ம் தேதி இந்தியாவின் செயற்கைக்கோள் தகர்ப்பு சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. தரையில் இருந்து புறப்பட்ட ஏவுகணை, மூன்றே நிமிடத்தில் 300 கி.மீ தொலைவில் இருந்த செயற்கைக்கோளைத் தாக்கியது. இதனால், செயற்கைக்கோள் தகர்ப்பு சக்தி கொண்ட நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மிஷன் சக்தி தொடர்பாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் 10 விஷயங்கள் தொடர்பாக பி.பி.சி தமிழ் வெளியிட்டுள்ள பதிவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, செயற்கைக்கோள் எதிர்ப்பு செயற்கைக்கோள் பற்றி டிஎன்நியூஸ்24 இணையதளம் சொல்லியிருக்கிறதே, அதன் சிறப்பு அம்சங்களை தெரிந்துகொள்வோமே, என்று நாமும் பதிவை படிக்கத் தொடங்கினோம். முதல் பத்தியிலேயே நம்மை கிளீன் போல்ட் ஆக்கிவிட்டனர்.
“இந்தியாவைக் கண்காணிக்க வரும் உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் இந்திய செயற்கைக் கோள்களை அழிக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோளை வானிலேயே பஸ்பமாக்கும் செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைப்பில் செயற்கைக்கோள் என்று உள்ளது. ஆனால், செய்தியின் முதல் பத்தியிலேயே அது செயற்கைக்கோள் இல்லை, ஏவுகணை என்று பின்வாங்கிவிட்டது, தெரிந்தது. தலைப்பில் தவறு செய்திருப்பது புரிந்தது.
இதுதவிர அந்த ஏவுகணையின் சிறப்புக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை என்று ஒரே வரியில் முடித்துவிட்டனர். ஆனால், முழுக்க முழுக்க ஒரு பக்க சார்பாக செய்தியை எழுதியிருந்தனர்.
உதாரணத்துக்கு, இந்த சோதனையை செய்ய 2013ம் ஆண்டு அப்போது இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ஒப்புதல் கேட்டதாகவும் ஆனால், அரசு அனுமதி அளிக்கவில்லை என்று டி.ஆர்.டி.ஓ-வின் முன்னாள் இயக்குநரும் தற்போது, நிடி ஆயோக் உறுப்பினர்களுள் ஒருவராகவும் உள்ள வி.கே.சரஸ்வாட் தெரிவித்ததை மேற்கோள் காட்டியுள்ளனர்.
அதேநேரத்தில், “10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் ஆர்வம் அப்போதைய அரசுக்கு இல்லை” என்று இஸ்ரோ முன்னாள் தலைவரும் தற்போது பா.ஜ.க-வின் உறுப்பினராகவும் உள்ள மாதவன் நாயர் கூறியதை மறைத்துவிட்டனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
2007ம் ஆண்டிலேயே இந்த சோதனையை சீனா செய்துவிட்டது. அப்போதே நாம் பயப்படவில்லை. தற்போது, இந்தியா நடத்திய சோதனையை கண்டு சீனா மட்டும் பயந்திருக்கும் என்று எழுதியிருப்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்ய நாம் விரும்பவில்லை. தனக்கு பிடித்த தலைவரை புகழுவதற்காக அந்த இணைய தளம் எடுத்த முயற்சி என்று நமக்குத் தெரிகிறது. அதேநேரத்தில், செய்தியின் உள்ளே, ஏவுகணை சோதனை வெற்றி என்று எழுதியவர்கள் தலைப்பில் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம்.
மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் செய்தி உண்மை, ஆனால் தலைப்பு தவறு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
உரிய ஆதாரங்களின்படி, இந்தியா நடத்தியது செயற்கைக்கோள் தகர்ப்பு ஏவுகணை சோதனை தான் என்பதும், குறிப்பிட்ட இணைய தளம் அதைத் தவறுதலாக செயற்கைக்கோள் என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Title:இந்தியா நடத்தியது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையா? செயற்கைக்கோள் சோதனையா?
Fact Check By: Praveen KumarResult: False Headline
