
பாபா ராம்தேவ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடி அளித்ததால், அவருடைய கடன் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பாபா ராம்தேவ், மோடியுடன் ராம்தேவ் இருக்கும் படங்களை வைத்து புகைப்பட பதிவு ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், நேற்று: பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணமாக 25 கோடி நிதியுதவி. இன்று: பாபா ராம்தேவின் ருச்சி சோயா நிறுவனத்தின் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி. என்னடா பித்தலாட்டம் இது” என போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “2000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று அதை இந்த அரசாங்கம் தள்ளுபடி செய்யும் பட்சத்தில் அதிலிருந்து 25 கோடி ரூபாய் கொடுப்பதற்கு கசக்குமா என்ன!!
இதற்கு இந்த அரசாங்கமும் துணை நிற்கிறது என்பது வெட்கக்கேடானது!! இவ்வளவு சலுகை பெற்ற பாபா ராம்தேவ் கேவலமான செயல் என்னவென்றால் தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் ஒருநாள் ஊழியத்தையும் பிடித்து பிரதமருக்கு அனுப்பி இருப்பது தான். மனிதம் காற்றில் பறக்கிறது!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Kuttimani Thala என்பவர் 2020 மே 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விஜய் மல்லையா, பாபா ராம்தேவ் உள்ளிட்டவர்கள் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியது. அது தள்ளுபடி இல்லை ரைட்ஆஃப்தான்… கடனை வசூல் செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில். பாபா ராம்தேவ் நிறுவனத்தின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாத டாப் 50 பேரின் பெயரை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அப்படி அறிவிக்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வங்கிக் கடன் மோடி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களின் பெயரை அறிவிக்கக் கேட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் ரைட் ஆஃப் செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலை கடந்த ஏப்ரல் 24ம் தேதி ரிசர்வ் வங்கி வழங்கியது. அது தொடர்பான பதிவை சாகித் கோக்கலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதன் பிறகு திவாலான நிறுவனங்கள் பெயர் வைரல் ஆனது. அதில் ருச்சி சோயா நிறுவனத்தின் பெயரும் இருந்தது. இந்த நிறுவனம் ரூ.2,219 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் தற்போது பாபா ராம்தேவிடம் இருப்பதால் பலரும் ராம்தேவுக்கு கடன் தள்ளுபடி என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
மற்ற செய்திகளைக் காண்பதைவிட சாகித் கோக்கலே வெளியிட்ட பதிவு கிடைத்தால் தெளிவாக இருக்கும் என்று அவருடைய பதிவை தேடி எடுத்தோம். அதில், “ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தப்ப நினைத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. உண்மையை நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது என்பதே சோகமான உண்மை” என்று கூறி ரிசர்வ் வங்கி அளித்த பதிலை வெளியிட்டிருந்தார்.

அதில், மார்ச் 19, 2020 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற்று அதைத் திருப்ப செலுத்த முடியாமல் 50 திவாலான நிறுவனங்கள் பட்டியலை கேட்டிருந்தீர்கள். 2019 செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத, ரைட் ஆஃப் செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலையும் அவர்கள் செலுத்த வேண்டிய கடனையும் குறிப்பிட்டு வழங்கியுள்ளோம்” எனக் கூறியிருந்தனர்.
6வது பெயராக ருச்சி சோயா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பெயரும் இருந்தது. இதன் மூலம் செப்டம்பர் 30, 2020 வரையிலான காலக்கட்டத்தில் கடன் தள்ளுபடி அல்லது ரைட் ஆஃப் செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயரை மட்டுமே ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

சமீபத்தில்தான் ருச்சி சோயா நிறுவனத்தை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கையகப்படுத்தியிருந்தது. அது தொடர்பான செய்தியைத் தேடியபோது கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி bloombergquint வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் திவாலான ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் கையகப்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தனர்.
பாபா ராம்தேவ் ரூ.25 கோடி கொரோனா நிவாரண நிதி எப்போது அறிவித்தார் என்று தேடிப் பார்த்தோம். இது தொடர்பான செய்தி 2020 மார்ச் 30ம் தேதி ஊடகங்களில் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் கொரோனா நிவாரண நிதி வழங்கியதால் அவரது நிறுவனத்துக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று கூறுவது தவறானது என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,
பாபா ராம்தேவ் ருச்சி சோயா நிறுவனத்தை 2019 டிசம்பரில் கையகப்படுத்தியதாக செய்திகள் கிடைத்துள்ளன.
ருச்சி சோயா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி எப்போது செய்யப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஆனால், 2019 செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரைட்ஆப் செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் ருச்சி சோயாவும் உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் கிடைத்துள்ளது.
மார்ச் 30, 2020ல் தான் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடியை பாபா ராம்தேவ் அறிவித்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாபா ராம்தேவ் ருச்சி சோயா நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாகவே அந்த நிறுவனத்துக்கான கடன் தொகையை ரிசர்வ் வங்கி ரைட் ஆஃப் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கடன் தள்ளுபடிக்கும் பாபா ராம் தேவ் நிவாரண உதவி அறிவித்ததற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், பாபா ராம் தேவ் நிவாரண உதவி அறிவித்ததால், அவர் நிறுவனம் செலுத்த வேண்டிய 2212 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணம் கொடுத்ததால் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடியா? -உண்மை அறிவோம்
Fact Check By: Chendur PandianResult: False
