மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hindu Girl 2.png
Facebook Link 1Archived Link 1Facebook Link 2Archived Link 2

குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ரயில் மறியல் மற்றும் கல்லெறிதலில் இக்குழந்தையின் கண்ணில் பலத்த காயம். இதற்கு யார் பொறுப்பு. இந்த குழந்தையைக் காயப் படுத்தியதற்கும் CAB எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த குழந்தை பயணத்தின் போது ரயிலில் இருந்து தன் பெற்றோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார், மக்கள் பயணத்தின் போது CAB போராட்டம், மதத்தின் பேரால் உங்கள் சகோதரிகளையும், மகள்களையும் கொல்ல துணியாதீர்கள். 

இது ஹிந்து நாடு: ஹிந்துக்கள் சுதந்திரப் போராட்டத்தில் பிரிவினையில் இழந்தது பல. ஆனால் அவர்கள் பொறுமை காப்பது ஆத்திரத்தில் தவறு செய்யலாகாது என்பதற்காகவே! அது இந்த நாகரிகத்தின் வரலாறு. அந்த சிறிய குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது, ஏனெனில் அது ஒரு சிக்யூலார் மன நோயாளியின் கைவரிசையை காண்பிப்பதால்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Vijei Rangarajn என்பவர் டிசம்பர் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் குழந்தையின் கண் பறிபோனதாக ஒரு பதிவு வைரல் ஆனது. கடைசியில் அந்த குழந்தை சிரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். தற்போது, புதிதாக வேறு படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இந்த குழந்தை மேற்கு வங்கத்தில் ரயில் மீது கல் வீசியதில் பாதிக்கப்பட்ட குழந்தையா என்று கண்டறிய ஆய்வு நடத்தினோம். 

Search Link

முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பல உண்மை கண்டறியும் ஆய்வு நிறுவனங்களும் இந்த புகைப்படம் தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருந்தது தெரிந்தது. அவற்றை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, தேடினோம். அப்போது, வங்க மொழியில் நவம்பர் 13ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதை மொழியாக்கம் செய்து பார்த்தோம். அப்போது, வங்கதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 16 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

Hindu Girl 3.png
newslife24.comArchived Link 1
sylhettoday24.newsArchived Link 2
unb.com.bdArchived Link 3

தொடர்ந்து ஆய்வு செய்தபோது ஆங்கில இதழ்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில், இந்த சிறுமியின் தாய் உள்பட நான்கு உறவினர்கள் இந்த ரயில் விபத்தில் பலியானதாகவும் இந்த குழந்தையை இனி தான் பராமரிக்கப் போவதாக வங்கதேச நீர் வளத் துறை அமைச்சர் இனாமுல் ஹக்யு ஷமிம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் 2019 டிசம்பர் 9ம் தேதி தான் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் டிசம்பர் 12ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட சூழலில்தான் போராட்டங்கள் வெடித்தன. வடகிழக்கு, மேற்கு வங்கத்தில் அது வன்முறையாக மாறியது. அப்படி இருக்கும்போது, வங்க தேசத்தில் ஒரு மாதத்துக்கு முந்தைய படத்தை எடுத்து இப்போது இந்தியாவில் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர் என்பது தெரிந்தது.  

நம்முடைய ஆய்வில்,

இந்த குழந்தை படம் 2019 நவம்பர் 12ல் வங்க தேசத்தில் நடந்த ரயில் விபத்தின் போது எடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

குழந்தையின் பராமரிப்பை ஏற்றுக்கொள்வதாக வங்க தேச அமைச்சர் கூறிய செய்தி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் இந்து குழந்தை காயம் அடைந்தது என்று பகிரப்படும் தகவல் மற்றும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False