FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S என்பவர் 2020 டிசம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளார்.

Archive

இந்த படத்தை பா.ஜ.க நிர்வாகி CTR.Nirmal kumar டிசம்பர் 3, 2020 அன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “காலிஸ்தான் கோரிக்கை எப்படி விவசாயத்திற்கான கோரிக்கையாக இருக்கும்?” என்று கேட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Ranjithkumar Mavilayi என்பவர் டிசம்பர் 1ம் தேதி இதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “Farmers , விவசாயிகள் போராட்டம் இப்போ எங்கே போய் நிக்குது பாருங்க , இவர்களுக்கு Funding அதே புது தில்லி சிஎஎ போராட்ட குழுக்களுக்குப் பட்டுவாடா பண்ண அதே குள்ளநரி கூட்டம் தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் வரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாயிகள் போராட்டம் என்பது தேச விரோத போராட்டம் என்று காட்ட சமூக ஊடகங்களில் சிலர் தீவிரமாக பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. 

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளாக செய்தி ஊடகங்கள் பயன்படுத்தி வருவதைக் காண முடிந்தது. 

விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 2020 மார்ச் 30ம் தேதி இந்த படத்தை theweek.in வெளியிட்டிருந்தது. மாதிரி புகைப்படம் என்று குறிப்பிட்டு ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர். சீக்கியர்கள் போராட்டம் தொடர்பாக இந்த படத்தை zeenews 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பதிவிட்டிருந்தது. 

அசல் பதிவைக் காண: theweek.in I Archive 1 I zeenews.india.com I Archive 2

இதன் மூலம் இந்த புகைப்படம் தற்போது டெல்லியில் நடந்து வரும ;விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். 

ஏ.பி, கெட்டி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் புகைப்படங்களை விற்பனை செய்யும் தளங்களில் காலிஸ்தான், சீக்கியர்கள், போராட்டம் என பல கீ வார்த்தைகளை வைத்து தேடினோம். அப்போது கெட்டி தளத்தில் இந்த புகைப்படம் நமக்குக் கிடைத்தது.

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்ததின் (ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார்) 29ம் ஆண்டு நினைவுதினத்தை 2013ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சீக்கியர்கள் அனுசரித்தார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனுடன் வேறு சில புகைப்படங்களும் கிடைத்தன. அதில் இந்த போராட்டம் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் நடந்தது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: gettyimages.in 1 I Archive 1 I gettyimages.in 2 I Archive 2

இதன் மூலம் 2013ம் ஆண்டு சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தின் படத்தை தற்போது டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2013ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நடந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 2020 விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று விஷமத்தனமாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.  எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •