
வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திச் சென்று அடித்து சித்ரவதை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மிகக் கொடூரமாக இளம் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் வங்க மொழியில் பேசுவது போலத் தெரிகிறது. ஆனால், அவர் யார், எதற்காக அந்த பெண்ணை அடிக்கிறார்கள் என்று இல்லை.
நிலைத் தகவலில் மிக மோசமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். அதன் எடிட் செய்யப்பட்ட வெர்ஷன்:
“வங்கதேச இஸ்லாமியர் ஒருவர் கேரளா வந்து இந்து பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திக் கொண்டு போய் சித்ரவதை செய்து அடித்தே கொல்கிறான்.
அவனை தடுக்க ஒரு இஸ்லாமியரும் முன் வரவில்லை. ஒரு மூதாட்டியைத் தவிர. இந்து மக்களே பெண்களே, இஸ்லாமியரையோ, கிருத்துவரையோ லவ் செய்து வீட்டுக்கு அடங்காமல் ஓடினால் இதே நிலைதான் உங்களுக்கும்.
பெண்ணின் பெற்றோரே, சகோதரர்களே தங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள், இஸ்லாமியர்களின் கோரமுகங்களைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். நம் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள், தப்பு பண்ணமாட்டார்கள், இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை எல்லாக் குழுக்களுக்கும் பகிருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர். இதனுடன் ஒரு யூடியூப் வீடியோ லிங்க் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீடியோ நீக்கப்பட்டு இருந்தது.
இந்த வீடியோவை Kshatriya tv என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இளம் பெண் ஒருவர் மிக மோசமாக தாக்கப்படுகிறார். ஆனால், அதைத் தடுக்காமல் இத்தனை பேர் வேடிக்கை பார்க்கிறார்களே என்ற கோபம் வந்தது. வீடியோ முழுவதையும் பார்க்கும்போது அந்த இளம் பெண்ணை காப்பாற்றுவதற்காக அந்த மூதாட்டி வந்தது போலத் தெரியவில்லை. அவரும் அடிக்கவே முயல்கிறார்… அந்த மூதாட்டியிடம் இருந்து அருகில் இருந்தவர்கள் கம்பை பிடுங்குவது தெளிவாகத் தெரிகிறது.
திருமண பிரச்னையா அல்லது காதல் பிரச்னையா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இது போன்று ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியது நினைவில் இருந்தது. ஆனால், தேடுவது சுலபமாக இல்லை.
வீடியோவின் காட்சிகள் சிலவற்றைப் படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ தொடர்பான அதிர்ச்சியான செய்திகள் கிடைத்தன.

வீடியோவில் உள்ள நபர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் இல்லை. இவர் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் மோவாமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பது தெரிந்தது. அடிவாங்கும் அந்த இளம் பெண் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்து பெண் இல்லை. ஜமாலுதீனின் மகள்தான் அவர். பாலியல் தொழில் செய்யும்படி அந்த இளம் பெண்ணை ஜமாலுதீனும் அவரது பாட்டியும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே, உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அந்த சிறுமியை போட்டு அடித்ததாக செய்தியில் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தொடர்ந்து தேடியபோது, இந்த சித்ரவதையில் சிறுமி பலத்த காயம் அடைந்ததாகவும் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் தெரிந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில் ஜமாலுதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றும் தெரிந்தது.
இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் கூறுகையில், “என்னை சட்டத்துக்கு புறம்பான பாலியல் தொழில் உள்பட சில தவறான நடவடிக்கைகளில் தள்ள என்னுடைய பாட்டி முயன்றார். ஆனால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் என்னை பள்ளிக்குச் செல்ல விடாமல் என்னுடைய பாட்டியும், அப்பாவும் தடுத்தனர். முதலில் என்னுடைய பாட்டிதான் அடிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து என்னுடைய தந்தையும் என்னை அடித்தார்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
பாலியல் தொழில் செய்ய மறுத்த மகளை அடித்த அஸ்ஸாம் தந்தை என்று ஆஜ் தக் 2019 ஆகஸ்ட் 3ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த வீடியோ தொடர்பாக சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் மேற்கொண்டது தொடர்பான கட்டுரைகளும் நமக்குக் கிடைத்தன. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை சம்பவத்தை மறைத்து, இருதரப்பினர் இதையே விஷ கருத்தை பதிய வைக்க Kshatriya tv முயற்சித்துள்ளது.
நம்முடைய ஆய்வில்,
தாக்கப்பட்ட இளம் பெண் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
தாக்கியவர் அந்த இளம் பெண்ணின் தந்தை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டது நமக்குக் கிடைத்துள்ளது.
ஆஜ்தக் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கேரள இந்து பெண்ணை லவ் ஜிகாத் செய்து கடத்திச் சென்ற வங்கதேச இஸ்லாமியர் ஒருவர் அந்த இளம் பெண்ணை அடித்து சித்ரவதை செய்வதாக வெளியான ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கேரளா பெண்ணை லவ் ஜிகாத் செய்து அடிக்கும் இஸ்லாமியர்?
Fact Check By: Chendur PandianResult: False
