“போலீசாரை தாக்கிய பா.ஜ.க-வினர்?” – ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்துக்குள் பா.ஜ.க-வினர் புகுந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Gingee 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

Moulavi Alim Albuhari BBA LLB என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 56 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று 2019 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், செஞ்சி காவல் நிலைய வாசலிலேயே போலீசார் தாக்கப்படும் காட்சிகள் வருகின்றன.

நிலைத்தகவலில், “செஞ்சி காவல்நிலையம் புகுந்து காவலர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய பாஜகவினர். மிகவும் பரவலாக பேசப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்று எங்கேயும் கூறவில்லை. அவர்கள் பா.ஜ.க-வை சார்ந்தவர்கள் என்பதற்கு எந்த அடையாளமும் வீடியோவில் இல்லை.

ஆனால், செஞ்சி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. இதனால், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று கண்டறிய கூகுளில் “செஞ்சி போலீசை தாக்கியவர்கள் கைது” என்று டைப் செய்து தேடினோம். நம்முடைய தேடலில் இந்த சம்பவம் பற்றிய செய்தி மற்றும் வீடியோ கிடைத்தன.

Gingee 3.png

இது தொடர்பாக முன்னணி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டிருந்தன. எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆகஸ்ட் 30ம் தேதி மாலை மலர் வெளியிட்ட செய்தியைப் படித்துப்பார்த்தோம். அதில், “செஞ்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக உரிய ஆவணம் இன்றி மோட்டார் சைக்கிளில் நாகம்பூண்டியை சேர்ந்த அல்லிமுத்து என்பவரது மகன்கள் நாகராஜ் (வயது 23), ரமேஷ்(25) ஆகியோர் குடிபோதையில் வந்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதுபற்றி அறிந்த அல்லிமுத்து கோபம் அடைந்தார். மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணத்துடன் அவர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார்.

இதை பார்த்த காவலர் ஜெயசங்கர், தகராறை விலக்கி விட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து தனது மகன்கள் நாகராஜ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து காவலர் ஜெயசங்கரை தாக்கினார். இது தொடர்பாக, அல்லி முத்து, நாகராஜ், ரமேஷ் ஆகிய 3 பேரை செஞ்சி போலீசார் கைது செய்தனர்” என்று இருந்தது. அவர்களின் கட்சி சார்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மாலை மலர் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

வேறு செய்தி ஊடகங்களில் கட்சி சார்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். தமிழ் சமயம், தினகரன், நியூஸ் 18, தினமலர், ஏஷியாநெட் தமிழ், இந்து ஆங்கிலம் என எந்த ஒரு ஊடகத்திலும் இவர்கள் பா.ஜ.க-வை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை.

இது தொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். “நடந்த சம்பவம் உண்மைதான். ஆனால் அவர்கள் எந்த ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றனர். 

இது குறித்து விழுப்பும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “இவர்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. தவறான தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையில் அல்லிமுத்து என்பவர் அரசு துறை ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர். அவருடைய இரண்டு மகன்களும் பொறியியல் பட்டதாரிகள். சம்பவத்தன்று அல்லிமுத்துவின் மகன்கள் மது அருந்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை விசாரித்தபோது அவர்களிடம் வண்டி தொடர்பான ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்தது. அதனால் ஆவணத்தை கொண்டு வரும்படி கூறி வண்டியை பறிமுதல் செய்து செஞ்சி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

படம்: விழுப்பும் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

விநாயக் சதுர்த்தி ஊர்வலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒரு மீட்டிங்கில் இருந்துள்ளார். இதனால் வண்டியின் ஆவணங்களுடன் வந்த அல்லிமுத்து மற்றும் அவரது மகன்களை இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், மது போதையில் வெளியில் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக அல்லிமுத்து மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டு அன்றே ரிமாண்ட் செய்யப்பட்டுவிட்டனர். அவர்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

உண்மையில் இவர்கள் பா.ஜ.க-வைச் சார்ந்தவர்களாகவோ வேறு எந்த ஒரு கட்சியைச் சார்ந்தவர்களாகவோ இருந்திருந்தால் அது பற்றி செய்தியில் குறிப்பிட்டு இருப்பார்கள். குறைந்தபட்சம் பா.ஜ.க எதிர்ப்பு ஊடகங்களிலாவது செய்தி வெளியாகி இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இவர்கள் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட செஞ்சி காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் மறுத்துள்ளனர். இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“போலீசாரை தாக்கிய பா.ஜ.க-வினர்?” – ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •