
அமெரிக்காவில் வங்கியை உடைத்து பணத்தை எடுத்து மக்களுக்குப் பகிர்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கார் மீது நிற்கும் ஒருவர் பணத்தை வாரி இறைக்கிறார். மக்கள் அனைவரும் பணத்தை எடுக்க ஓடுகின்றனர். கீழே அரபி மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவிலுள்ள வங்கியை உடைத்து பணத்தை மக்களுக்கு பகிர்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Mohamed Safirullah என்பவர் ஜூன் 3, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் நிறவெறி காரணமாக காவல் துறை அதிகாரி ஒருவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்தை மிதித்துக் கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக வீடியோ பகிரப்பட்டது. கடைசியில் அது ஒஹயோ ஸ்டேட்டிபில்டிங் என்ற இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வங்கியை உடைத்து பணத்தை மக்களுக்கு பகிர்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அமெரிக்காவில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா அல்லது வேறு நிகழ்வு ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2019ம் ஆண்டு டிசம்பரில் பல சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.

ராப் பாடகர் ப்ளுஃபேஸ் சாலையில் பணத்தை வீசி எறிந்து வீடற்ற மக்களை இழிவுபடுத்தியதாக பல செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அந்த செய்தியில் அமெரிக்காவின் ராப் பாடகர் ப்ளுஃபேஸ் கிறிஸ்துமஸ் ஈவுக்கு முந்தைய நாள் ஏழைகளுக்கு உதவும் வகையில் பணத்தை வீசினார் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஏழைகளுக்கு பணத்தை வழங்கும் முறை இது இல்லை என்று அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
ப்ளுஃபேஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதன் மூலம், ஏழைகளுக்கு உதவிகள் செய்கிறேன் என்று ராப் பாடகர் ஒருவர் பணத்தை வீசிய வீடியோவை எடுத்து அமெரிக்காவில் வங்கிகளை உடைத்து மக்களுக்கு பணத்தை வழங்குகிறார்கள் என்று தவறான தகவல் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அமெரிக்காவில் வங்கியை உடைத்து மக்களுக்கு பணம் வழங்கினார்களா?- உண்மை அறிவோம்!
Fact Check By: Chendur PandianResult: False
