மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

சமூக ஊடகம் | Social தமிழகம்

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link

நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார். 

Facebook Claim Link 2Archived Link

இந்த செய்தி பார்க்க நகைச்சுவை போல இருந்தாலும், பலரும் இதனை உண்மை என நம்பி கமெண்ட் பகுதியில் ஆதங்கப்படுவதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
சமீபத்தில் மதுரையை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர், தனது வீட்டின் அருகே கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கூலித்தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தனது மகளின் கல்விக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து, செலவிட்டார். இந்த சம்பவம் வெளியில் தெரியவந்து, பலரும் அவரது நற்குணத்தை பாராட்டினார்கள். இதுபற்றி பிரதமர் மோடியும் கேள்விப்பட்டு, மான் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மோகனை அவரது பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மோகன் பாஜகவில் சேர்ந்ததாக, தகவல் பரவவே, அதனை அவர் மறுத்தார். வாழ்த்து அட்டை எனக் கூறி பாஜக உறுப்பினர் அட்டையை கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்றும் மோகன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

News18 LinkArchived Link 

இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியும் பரவி வருகிறது.   

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மாஸ்க் அணியாமல் வெளியில் வந்தால், போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், பல இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல்தான் நடமாடுகிறார்கள். அவர்களை போலீசார் எச்சரித்தாலும் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இதுபோன்ற எச்சரிக்கையை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. மேலும், இப்படி யாரும் வெளிப்படையாக பொதுமக்களை எச்சரிக்கவும் முடியாது.

இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில், நியூஸ்7 டிவி தரப்பில் விசாரித்தோம். இதனை பார்வையிட்ட நியூஸ்7 ஆன்லைன் பிரிவு நிர்வாகி, ‘’இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. வேண்டுமென்றே சிலர் இதனை பரப்பி வருகின்றனர்,’’ எனக் குறிப்பிட்டார்.

எனவே, நகைச்சுவைக்காக யாரோ ஒருவர் உருவாக்கிய தகவல், படிப்படியாக உண்மை என நம்பி பலரால் ஷேர் செய்யப்படுகிறது என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False