
ஒரே ஒரு முறைதான் மோடி அமேசான் காட்டுக்குச் சென்றார்… மொத்த காடும் அழிந்துவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரதமர் நரேந்திர மோடி சிரிக்கும் புகைப்படத்தை வைத்து மீம் உருவாக்கியுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “ஒரே ஒரு தடவைதான் இந்தியாவுக்கு பிரதமர் ஆனேன்… மொத்த நாடும் குளோஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
கீழ்ப் பகுதியில், “அதேபோல ஒரே ஒரு முறைதான் அமேசான் காட்டுக்குள்ள காமரா முன்னாடி நடித்தேன்… மொத்த காடும் குளோஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது பற்றியும், டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோடி தற்போது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். முதன் முறையாக 2014ம் ஆண்டு மே 26ம் தேதி அவர் பிரதமர் பதவி ஏற்றார். இரண்டாவது முறையாக 2019 மே 30ம் தேதி பதவி ஏற்றார்.
“ஒருமுறைதான் இந்தியாவுக்குப் பிரதமர் ஆனேன்… மொத்த நாடும் குளோஸ்” என்று விசமத்தனமாகப் பதிவிட்டுள்ளனர். அந்த கருத்துக்குள் நாம் செல்ல விரும்பவில்லை… ஆனால், அவர் ஒருமுறைதான் பிரதமராக பொறுப்பேற்றார் என்ற தகவல் தவறானது என்பது மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்.இரண்டாவதாக, “அமேசான் காட்டுக்குள் காமரா முன்னாடி நடித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோடி அமேசான் காட்டுக்குச் சென்றரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பான செய்திகள்தான் நமக்குக் கிடைத்தன.

அந்த நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள காடு ஒன்றில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதி செய்ய, எங்கே இந்த நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டது என்று தேடினோம். உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டதாக டிஸ்கவரி சேனல் தெரிவித்துள்ளது தெரிந்தது. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருந்த ட்விட்டல் கூட, பச்சைப் பசேல் என்று இருக்கும் காடுகள், பலவகையான வனவிலங்குகள், அழகான மலைகள், கவர்ந்திழுக்கும் ஆறுகளை இந்தியாவில் நீங்கள் காணலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ட்வீட்…
மோடியுடனான இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டதற்காக ஜிம் கார்பெட் தேசிய பூங்காவுக்கு ரூ.1.26 லட்சத்தை டிஸ்கவரி சேனல் வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
பிரதமர் அமேசான் காட்டுக்குச் சென்றதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் படமாக்கப்பட்டதாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.
மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி படமாக்கப்பட உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவுக்கு ரூ.1.26 லட்சத்தை டிஸ்கவரி சேனல் வழங்கியுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரதமர் மோடி அமேசான் காட்டுக்குச் சென்றதால், அந்த காடு அழிந்துவிட்டது என்று பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
