மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக நீதி அமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலினுக்கு மம்தா பேனர்ஜி பதிலடி. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை சமூகநீதியில் திரிணாமுல் காங்கிரஸ் பல பணிகளை செய்துள்ளது திமுக போல் ஒரு குடும்பம் முடிவெடுக்க முடியாது எங்கள் கட்சி நிர்வாகிகள் தான் முடிவெடுக்க முடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Prof.Dr.Srinivasan Fans Coimbatore wing என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 37 கட்சித் தலைவர்களுக்கு சமூக நீதிக்கான கூட்டமைப்பில் இணையக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இந்த கூட்டமைப்பில் இணைய மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்ததாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பா.ஜ.க அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரத்தில் கூட மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ஸ்டாலின் கருத்து வெளியிட்டார். மேலும், மம்தா பானர்ஜியுடன் பேசும் போது ” எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடி சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். விரைவில் டெல்லிக்கு வெளியே எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும்” என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த சூழலில் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதைப் பகிர்பவர்கள் பலரும் பாஜக ஆதரவாளர்களாக உள்ளனர். இந்த நியூஸ் கார்டின் டிசைன் மற்றும் தமிழ் ஃபாண்ட் எதுவும் தந்தி டிவி வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் மம்தா பானர்ஜி ஸ்டாலினின் சமூக நீதிக்கான கூட்டமைப்பு பற்றி ஏதும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். மேற்கு வங்க சட்டமன்ற முடக்கம்… அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம் தொடர்பான செய்திகள் மட்டுமே கிடைத்தன. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பதிலடி கருத்து அளித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. மம்தா பானர்ஜியின் சமூக ஊடக பக்கங்களையும் பார்வையிட்டோம். அதிலும் அப்படி எதுவும் இல்லை. மம்தா பானர்ஜி உண்மையில் அவ்வாறு கூறியிருந்தால் அகில இந்திய அளவில் மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். ஸ்டாலினுக்கு பின்னடைவு என்று செய்தி வெளியிட்டிருப்பார்கள். அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லாத சூழலில் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று பார்த்தோம். பிப்ரவரி 15, 2022 அன்று தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளில் மம்தா பானர்ஜி தொடர்பான நியூஸ் கார்டு இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டது என்று தெளிவானது. இதை உறுதி செய்ய தந்தி டிவி  டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்றார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக கூட்டமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தும் சமூக நீதி அமைப்பில் சேர முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False