தாவூத் இப்ராஹிமுடன் தி.மு.க-வுக்கு தொடர்பு என்று நியூயார்க் டைம்ஸ் சொன்னதா?

அரசியல் சமூக ஊடகம்
DMK 1.png

தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் பணம் கொடுத்தது உண்மை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

DMK 2.png

Facebook Link I Archived Link

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசுவது போன்ற படத்தை ஒன்று சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “தாவூத் இப்ராஹிம் திமுகவிற்கு பணம் கொடுத்தது உண்மை – நியூயார்க் டைம்ஸ்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டு இருந்தது. இதை யாரோ ஒருவர் “கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தி.மு.க விடுவித்ததே, அதன் பின்னணியில் நடந்தது இதுதானா?” என்று பகிர்ந்திருக்கிறார். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அப்படியே பகிர்ந்துள்ளனர்.

இந்த படத்தை Ponni Ravi என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க நிலைப்பாடு காரணமாக அந்த கட்சியை ஆளும் பா.ஜ.க-வினர் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்றே எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க கூறுகிறது. தி.மு.க-வின் நிலைப்பாடு சரியா, தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க செயல்படுகிறது என்று எதிர் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

தொடர்ந்து தி.மு.க-வுக்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்து வருவதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படும் கட்சி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்துக் கூறியதாக எல்லாம் தொடர்ந்து வதந்திகள் உருவாக்கிப் பரப்பி வந்தனர்.

தற்போது, தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் பணம் கொடுத்தது உண்மை என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த செய்திக்கான யு.ஆர்.எல் இணைப்பு அல்லது செய்தியின் ஸ்கிரீன்ஷாட் என எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருப்பதால் அது உண்மை என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. 

Archived Link

பலரும் இதற்கான ஆதாரத்தை கேட்டு வருகின்றனர். ஆனால், பதிவிட்டர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

DMK 3.png

தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் நிதி உதவி செய்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தால் அது இந்தியாவின் அதிகம் பேசக்கூடிய விஷயமாக மாறி இருக்கும். அப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

DMK 4.png

நியூயார்க் டைம்ஸ் இணையதளத்துக்கு சென்று தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் நிதி உதவி செய்தார் என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி ஏதும் கிடைக்கவில்லை. அந்த இணையதளத்தில் உள்ள தேடுதலில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

DMK 5.png

எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தி.மு.க பற்றி தவறான கருத்தைப் பரப்பும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

இந்த பதிவை வெளியிட்ட Ponni Ravi தொடர்ந்து தவறான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ கட்டுரைகளில் உறுதிசெய்துள்ளோம். இருப்பினும் என் பணி தவறான தகவலை பரப்புவதே என்று தொடர்ந்து இப்படி செய்து வருகிறார். 

அவர் வெளியிட்ட சில பதிவுகள் பற்றி வெளியான நம்முடைய கட்டுரைகள்…

மேக்அப் மேனுடன் வலம் வரும் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்.

இந்திரா காந்தி இஸ்லாமியராக மதம் மாறினார்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு கிறிஸ்தவர்.

பிரதமர் மோடியின் சாதனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றிப் பதிவிடலாம். எதிர்க்கட்சிகள் செய்யும் தவற்றை ஆதாரம் இருந்தாலோ, ஆதாரத்தோட பகிரலாம். ஆனால், பொய்யான பதிவுகளை உருவாக்கி பகிர்வது ஏன் என்று தெரியவில்லை.

நம்முடைய ஆய்வில், தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் நிதி உதவி அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தாவூத் இப்ராஹிமுடன் தி.மு.க-வுக்கு தொடர்பு என்று நியூயார்க் டைம்ஸ் சொன்னதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •