பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி?

சமூகம்

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்ற பெயரில், சில வைரல் ஃபேஸ்புக் செய்திகளை காண நேரிட்டது. ஒரே செய்தியை, இரு வேறு புகைப்படங்களை வைத்து பகிர்ந்திருந்தனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

தகவலின் விவரம்:
பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி பாராட்டுங்க !
Police officers shots at 3 rapists who gangraped underage girl in bihar

Archived Link

பெண் போலீஸ் சீருடையில் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் தலைப்பில், ‘’பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி பாராட்டுங்க ! Police officers shots at 3 rapists who gangraped underage girl in bihar,’’ என்று எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவை உண்மை என நம்பி, இதுவரை 19 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

இதேபோல, மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், வேறொரு பெண் போலீசின் புகைப்படத்தை பகிர்ந்து, இதே கமெண்டை பகிர்ந்திருந்தனர்.

Archived Link

இதில், போலீஸ் சீருடையில் ஒரு பெண் சிரித்தபடி நிற்கிறார். ஆனால், அவர் யார், எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் கூறப்படவில்லை.

உண்மை அறிவோம்:
ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என கண்டறிய, முதலில், கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால் இந்த புகைப்படம் உண்மையான போலீஸ் அதிகாரியுடையது இல்லை என்பது போலவும், இது யாரோ மாடல் என்பது போலவும் கூகுள் தகவல்கள் கிடைத்தன.

இதன்பின், இரண்டாவதாக, நம் கண்ணில் சிக்கிய பெண் போலீஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படத்தை, #Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, அந்த புகைப்படம் தொடர்பாக பல்வேறு இணைப்புகள் கிடைத்தன.

இதன்படி, ஒரு இணைப்பை திறந்து பார்த்தபோது, அந்த பெண் போலீஸ், புஷ்கார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அவரை ரோமானிய புகைப்பட கலைஞர் மைக்கேலா நோரக் படம்பிடித்து, இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு மகளிர் தினத்தின்போது எடுக்கப்பட்டதாகும். இதுபற்றிய விரிவான செய்தித் தொகுப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது. எனவே, இந்த பெண் போலீசும், பீகாரைச் சேர்ந்தவர் இல்லை என உறுதியாகிறது.  

ஒருவேளை இதுதொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என மீண்டும் கூகுளில், தமிழ், ஆங்கிலத்தில் தேடி பார்த்தோம். நீண்ட நேரம் தேடியும், இந்த பதிவில் உள்ளது போன்ற செய்தி எதுவும் கண்ணில் சிக்கவில்லை. மாறாக, பல்வேறு பலாத்கார செய்திகளே கிடைத்தன.

எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. யாருமே, இப்படி ஒரு சின்ன பதிவு கூட சமூக ஊடகங்களில் பகிரவில்லை. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு போன்ற ஒரு சில ஃபேஸ்புக் பதிவுகளில்தான், இப்படியான ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது.

அதிலும், ஒரு சுவாரசிய தகவல், இந்த பதிவை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பக்கத்தின் பெயர் சமுத்திரக்கனி என உள்ளது. சமுத்திரக்கனி தமிழ் சினிமா நடிகர் மற்றும் இயக்குனர். அவரது பெயரில் உண்மையாகவே இப்படி ஒரு ஐடி கிடையாது. ஒரு போலி ஐடியை கிரியேட் செய்து, இவர்களாகவே, உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்துள்ளனர். இவர்களை பற்றிய விவரம் அறிய தேடிப் பார்த்தால், இந்த பக்கம் சமுத்திரக்கனியின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை என, அவர்களே, விளக்கமும் கொடுத்திருந்தனர்.

இதேபோல, மேற்கண்ட செய்தியை அஜித்குமார் என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.

Archived Link

இதுவும் ஒரு டுபாக்கூர் ஃபேஸ்புக் பக்கம் ஆகும். நடிகர் அஜித்துக்கு, சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ ஐடி எதுவும் கிடையாது. நடிகர்கள், இயக்குனர்கள் பெயரில் யாரோ ஒரு நபர் ஐடி ஓபன் செய்து, போலி தகவல்களை பரப்புவது ஃபேஸ்புக்கில் வழக்கமான ஒன்றாக உள்ளது.

இதுதவிர, மற்றொரு பெண் போலீசின் புகைப்படத்தை பகிர்ந்திருந்த ஃபேஸ்புக் பக்கங்களும், லைக் வாங்குவதற்காக, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பகிர்பவர்களாகவே உள்ளனர். அப்படித்தான் இந்த வதந்தியும் பரப்பப்பட்டுள்ளது. எனவே, இது அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

யாரோ இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்களை எடுத்து, இவர்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி?

Fact Check By: Parthiban S 

Result: False