டான்ஸ் நிகழ்ச்சி நடுவர்களை மிரட்டிய பா.ஜ.க தலைவர்- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்களை பா.ஜ.க பிரமுகர் மிரட்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்னுடைய தந்தை பிரபல புள்ளி என்பதால் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதனால் நடுவர்கள் அவரை வெளியேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக தலைவருடைய மகனாம் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி நொய்டாவில் நடந்ததில் பங்கு கொள்கிறார்…

நான் இதில் கண்டிப்பாக தேர்வாகவேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு என் தந்தை பெரிய ஆள் என்று நடுவர்களை மிரட்டுகிறார்.இதற்கு பயப்படாத நடுவர்களில் ஒருவர் மைக்கை வாங்கி கொண்டு விரட்டி விடுகிறார்… போனவன் தந்தையுடன் வந்து மேடையில் செய்யும் அலப்பறை‌ தான் இந்த வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீடியோவை Mohamed Nizamudeen என்பவர் 2020 செப்டம்பர் 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் உள்ள உரையாடல் இந்தியில் உள்ளது என்பதால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அதே நேரத்தில் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கேட்பதும், அவரை வெளியேற்றுவதும், பிறகு அவர் தனது தந்தையை கூட்டி வருவதும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மைக் பிடித்து இப்படி வெளிப்படையாக ஒருவர் மிரட்டுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமா மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மிரட்டிய நபர் பா.ஜ.க இல்லை, இது செட்அப் செய்யப்பட்ட நிகழ்வு என்பது தொடர்பான சமூக ஊடக பதிவுகள் பல நமக்கு கிடைத்தன. மேலும் தனியார் தொலைக்காட்சியில் 2015ம் ஆண்டு ஒளிபரப்பான வீடியோ கிளிப்பும் நமக்கு கிடைத்தது. 

Facebook LinkArchived Link 1
zee5.comArchived Link 2

அதைப் பார்த்த போது, போட்டியாளரின் தந்தை வந்து ஆவேசமாக பேசுகிறார், அதன் பிறகு நடுவரைத் தாக்கும் வகையில் செல்கிறார். நிகழ்ச்சியின் பாதுகாவலர்கள் வந்து அவரைத் தடுக்கின்றனர். திடீரென்று பாடல் ஒலிக்க மற்ற நடுவர்கள், தந்தையை கூட்டி வந்து மிரட்டிய போட்டியாளர் ஒன்று சேர்ந்து நடனமாடத் தொடங்குகின்றனர். அப்போதுதான் இது திட்டமிடப்பட்ட நாடகம் என்பது மற்றொரு நடுவருக்குத் தெரியவருகிறது.

போட்டியில் பங்கேற்றவர் தன்னுடைய தந்தையை கூட்டி வந்து மிரட்டுவது போன்று நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவின் இறுதியில் இந்த ஏமாற்று வேலை திட்டம் பற்றி மற்றொரு நடுவர் கூறும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் முழு வீடியோவை வெளியிடாமல், தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்து, பா.ஜ.க பிரமுகர் மிரட்டியதாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டான்ஸ் நிகழ்ச்சி நடுவர்களை மிரட்டிய பா.ஜ.க தலைவர்- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False