
நாமக்கல்லில் சத்துணவுத் திட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டையை பா.ஜ.க பிரமுகர் திருடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாமக்கலில் இருந்து சத்துணவுத் திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளை திருடிய பா.ஜ.க பிரமுகர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ்கார்டை தந்தி டிவி பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டது போல குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், இந்த பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “படுகொலை செய்தால் – பாஜக பிரமுகர்! தேசத்தைக் காட்டி கொடுத்தால் – பாஜக பிரமுகர்! பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டால் – பாஜக பிரமுகர்! குழந்தைகளை வன்புணர்ந்தால் – பாஜக பிரமுகர்! பிரியாணி அண்டாவைத் திருடினால் – பாஜக பிரமுகர்! முட்டையைத் திருடினாலும் – பாஜக பிரமுகர்! அட நாதாரி ஊடகங்களே!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Abdul Rahuman Jamaludeen என்பவர் 2020 பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு தந்தி டி.வி வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டு போலத் தெரிந்தாலும் இதன் தமிழ் ஃபாண்ட், நாமக்கல்லில் என்று குறிப்பிடுவதற்கு பதில் நாமக்கலில் என்று குறிப்பிட்ட விதம், தகவல் உள்ள இடத்தில் பின்னணி டிசைன் இல்லாதது உள்ளிட்டவை இந்த நியூஸ் கார்டு தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த நியூஸ் கார்டை தந்தி டி.வி சமூக ஊடகம் மற்றும் இணையதளப் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி வைத்து அவர்கள் கருத்தைக் கேட்டோம். அவர்கள் பதில் அளிப்பதற்கு முன்னதாக உண்மையில் இந்த நியூஸ் கார்டை தந்தி டி.வி வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். நம்முடைய தேடலில் தந்தி டி.வி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.
அதில், “நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.4.10 ஆக நிர்ணயம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Facebook Link | Archived Link | Search Link |
குறிப்பிட்ட நாளில் நாமக்கல்லில் சத்துணவுக்கு அனுப்பப்பட்ட முட்டை திருடப்பட்டது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் போலியானது என்று உறுதியானது. அதே நேரத்தில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தந்தி டி.வி தரப்பில் நமக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாமக்கல்லில் இருந்து சத்துணவுத் திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளை திருடிய பா.ஜ.க பிரமுகர் என்று பகிரப்படும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முட்டையைத் திருடிய பா.ஜ.க பிரமுகர்! – ஃபேஸ்புக்கில் பரவும் தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
