
கைலாச மலை உச்சி இதுதான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எரிமலை வாய் போன்று காட்சி அளிக்கும் மலை ஒன்றின் 360 டிகிரி வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கையிலை மலை உச்சி இதுதான் அற்புதமாக எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை அகிலம் காக்கும் அண்ணாமலையார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sri Sivakami Pandiyan என்பவர் 2021 ஜூலை 19 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீனாவின் திபெத் பகுதியில் கைலாச மலை உள்ளது. மவுண்ட் கைலாஷ் என்றும் திருக்கயிலை என்றும் அழைக்கப்படும் கைலாச மலை இந்துக்கள், பௌத்தர்கள், சமண மதத்தினருக்குப் புனித இடமாக கருதப்படுகிறது. சிவன், பார்வதி கைலாய மலையில் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட கைலாய மலையை 360 டிகிரி கோணத்தில் எடுத்த வீடியோ என்றதும் சிவ பக்தர்கள் இது உண்மையா என்று கூட அறிய முயலாமல் ஷேர் செய்து வருகின்றனர்.

கைலாய மலை கிட்டத்தட்டப் பார்க்க சிவலிங்கம் போன்று காட்சி அளிக்கும். அதன் உச்சி கூர்மையாக இருக்கும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அப்படி சிவலிங்கம் போன்று காட்சி அளிக்கும் உயரமான சிகரம் இல்லை. மேலும், மலையின் மீது எரிமலை வாய் போன்று பகுதி இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இது கைலாய மலையாக இருக்காது என்று தோன்றவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் கூகுள் மேப்பில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் புகைப்படத்தை, கைலாச மலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டுக்கும் தொடர்பு இல்லை. சிகரம் போல காட்சி அளிக்கும் பகுதி வீடியோவில் இல்லை. மிகப்பெரிய காலி மைதானம் போல வீடியோ காட்சி இருந்தது.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலை என்று பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: instagram.com I Archive 1 I Facebook.com I Archive 2
2020ம் ஆண்டு ஜூலை மாதம் பைலட் ரெம்துல்லா ரிஸ்வான் என்பவர் இந்த வீடியோவை எடுத்தார் என்று இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கிளிமஞ்சரோ மலையின் கூகுள் மேப்பை பார்வையிட்டோம். அதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சியும் ஒத்துப்போனது. இதன் மூலம் மவுண்ட் கிளிமஞ்சரோ வீடியோவை எடுத்து, மவுண்ட் கைலாஷ் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்து வருவது உறுதியானது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
கைலாச மலை என்று பரவும் வீடியோ தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ என்பதை தகுந்த ஆதாரங்களுடன் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கைலாச மலையின் உச்சி என்று பகிரப்படும் வீடியோ- உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: False
