
இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்று இங்கிலாந்து அதிபர் சார்லஸ் வேதனை தெரிவித்தார் என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது சார்லஸ் வேதனை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அருகில் என்ன சங்கி காறி துப்புறான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Nakkheeran News tamil Live என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Muhammed Sufian என்பவர் 2020 ஜூலை 12ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சர்வதேச தலைவர்கள் யாரும் வெளிநாட்டின் ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பது இல்லை. அதிலும் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அப்படி சர்ச்சை பேச்சில் சிக்கியதாக செய்தி இல்லை. இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய அரசை விமர்சித்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை.
மேலும், பாலிமர் லோகோவுடன் வெளியான செய்தியில் எப்போது இந்த செய்தி வெளியானது என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.

முன்பு எப்போதாவது இந்திய ஆட்சியாளர்களைப் பற்றி விமர்சித்திருக்கிறாரா என்று தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது, இந்திய பண்பாட்டில் ஆர்வம் கொண்டிருப்பது தொடர்பான செய்திகள் கிடைத்தன.
அதிலும் குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேசிய இளவரசர் சார்லஸ் இந்திய கலாச்சாரத்தை புகழ்ந்து பேசிய செய்தி மட்டுமே கிடைத்தது. மேலும் பிரதமர் மோடியைப் பற்றி புகழ்ந்தும் அவர் பேசியிருந்தார்.

பாலிமர் டி.வி லோகோவுடன் செய்தி வெளியாகி இருப்பதால் அதில் ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம் என்று அவர் கூறிய செய்தி கிடைத்தது. அதுவும் இந்தியா குளோபல் வீக் நிகழ்வு தொடர்பானது என்று தெரிந்தது.
அது தவிர இளவரசர் சார்லஸ்க்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட போது பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தது உள்ளிட்ட செய்திகள் கிடைத்தன. இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்று இளவரசர் சார்லஸ் கூறியதாக ஒரு சின்ன தகவல் கூட கிடைக்கவில்லை.

“இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்” என்று பாலிமர் வெளியிட்டிருந்த செய்தியில் உள்ள இளவரசர் சார்லஸ் படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருந்த இளவரசர் சார்லஸ் படமும் ஒன்றாக இருந்தது. ஜூலை 11ம் தேதி பாலிமர் வெளியிட்ட இந்த செய்தியை எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து ஜூலை 12ம் தேதி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கலாம் என்பது உறுதியானது.
இது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சியின் ஆன்லைன் பிரிவைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஊரடங்கு காரணமாக நிர்வாகியைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் பாலிமர் தொலைக்காட்சி தரப்பில் பேசியவர்கள் இந்த செய்தி நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்று இளவரசர் சார்லஸ் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
