
முரசொலி நிலம் தொடர்பான விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருவதாக கூறி பின்வாசல் வழியாக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சீனிவாசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “முரசொலி விவகாரத்தில் விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருதாக கூறி பின் வாசல் வழியாக தப்பி ஓடிய சீனிவாசன் BJP” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Syed RkNagar என்பவர் நவம்பர் 20, 2019 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் தி.மு.க – பா.ம.க-வுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், நடுவே பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்துகொண்டு தி.மு.க-வுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முரசொலி அறக்கட்டளையானது பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும் அதை மீட்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தது.
இந்த புகார் அடிப்படையில் விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அறக்கட்டளை அறங்காவலரும் தி.மு.க எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி இந்த புகாரை விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை என்றும், புகாரில் எந்த ஒரு ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை என்றும், அப்படி அவர்கள் புகாருக்கான அடிப்படை ஆதாரத்தைக் காட்டினால் அதுபற்றி விளக்க தயாராக உள்ளதாக கூறினார்.
இந்த விசாரணையின்போது பாரதிய ஜனதா கட்சி செயலாளர் சீனிவாசன் பயந்து பின்பக்கமாக ஓடியதாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜரானதுடன், விசாரணை முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாக பல செய்திகள் வெளியாகி இருந்தன.
vikatan.com | Archived Link 1 |
dailythanthi.com | Archived Link 2 |
இந்த சூழ்நிலையில், சீனிவாசன் பயந்து கழிவறை செல்வதாக கூறி பின்பக்கம் வழியாக தப்பி ஓடினார் என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
விகடன், தினமலர், தினந்தந்தி என தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் அனைத்தையும் பார்த்தோம். அதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணைக்குப் பிறகு சீனிவாசன் பேட்டி அளித்தாக குறிப்பிட்டிருந்தனர். அந்த பேட்டியில் கூட, “நாங்கள் அவகாசம் கேட்கவில்லை. தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்களையும் கேட்டுள்ளோம். இதை ஏற்று விசாரணையை 2020 ஜனவரிக்கு விசாரணையை ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தேதி குறிப்பிடவில்லை” என்று கூறியுள்ளார்.
tamil.indianexpress.com | Archived Link |
முழு விசாரணையிலும் பங்கேற்றால் மட்டுமே, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது பற்றி அறிவிக்க முடியும். அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினார்கள் என்று சந்தேகம் எழுந்தது. ஒருவேளை நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சீனிவாசன் பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்புகிறாரா என்று கண்டறிய முடிவு செய்தோம். சீனிவாசன் பேசிய வீடியோ பதிவு ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்போது விசாரணை முடிந்த பிறகு சீனிவாசன் அளித்த பேட்டியை ஜெயா பிளஸ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது தெரிந்தது. அதைப் பார்த்தோம், தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, விசாரணை பற்றித் தெளிவாக சீனிவாசன் பேசுகிறார். பிறகு நிருபர்கள் கேள்விக்கும் பதில் அளிக்கிறார். அரசு தரப்பில்தான் அவகாசம் கேட்கப்பட்டது என்று கூறிவிட்டு அனைத்தும் முடிந்த நிலையில் அங்கிருந்து புறப்படுகிறார்.
Archived Link |
பா.ஜ.க தமிழக செயலாளர் சீனிவாசன் விசாரணைக்கு பயந்து வெளியேறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
அவர் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்ததாகவும், தங்கள் தரப்பில் அவகாசம் கேட்கவில்லை என்றும் கூறியதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
விசாரணைக்குப் பிறகு சீனிவாசன் அளித்த பேட்டி வீடியோ கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “முரசொலி நிலம் தொடர்பான தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணைக்கு பயந்து கழிப்பறைக்குச் செல்வதாக கூறி தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தப்பி ஓடினார்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முரசொலி விசாரணையின்போது கழிவறை செல்வதாகக் கூறி தப்பினாரா பாஜக செயலாளர் சீனிவாசன்?
Fact Check By: Chendur PandianResult: False

தவறான தகவல் பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன்
தவறான தகவல் பகிர்ந்தமைக்கு வருந்திகிரென்
தவறாக இருந்தால் பதிவை நீக்கலாம்