"பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்துள்ளது" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H Raja 2.png
Facebook LinkArchived Link

அத்திவரதர் மற்றும் எச்.ராஜா படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது - ஹெச்.ராஜா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Shaik Sulaiman என்பவர் 2019 செப்டம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அத்திவரதர் தரிசனம் முடிந்து மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டுவிட்டார், ஆனால் அந்த காலகட்டத்தில் வந்த வதந்திகளுக்கு மட்டும் முடிவே இல்லை என்பதை இந்த நியூஸ் கார்டு நிரூபிக்கிறது. பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது என்று எச்.ராஜா கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டில் செப்டம்பர் 4ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தகவல் உள்ள இடம் நியூஸ் கார்டுடன் பொருந்தாமல் தனியாக உள்ளதை காண முடிந்தது. பின்னணி லோகோ, டிசைன் என எதுவும் அதில் இல்லை. தமிழ் ஃபாண்டும் வித்தியாசமாக உள்ளது.

2019 செப்டம்பர் 4ம் தேதி எச்.ராஜா தொடர்பாக ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் "அத்திவரதர் எச்.ராஜா" என்று டைப் செய்து தேடியபோது, அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.

Archived Link

அதில், "தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான். நாத்திகர்களுக்கு இங்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளார் அத்திவரதர் - ஹெச்.ராஜா" என்று இருந்தது. இதன் மூலம், இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்தது.

இதை மேலும் உறுதி செய்ய, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் நியூஸ் கார்டில் உள்ள தகவலை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். எச்.ராஜா அவ்வாறு கூறியதற்கான எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

H Raja 3.png
Search Link

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவுக்கு அனுப்பி இந்த கார்டின் நம்பகத்தன்மையைப் பற்றி கேட்டோம். அப்போது, "இது போலியானது, எங்கள் டிசைன், ஃபாண்ட் இதில் இல்லை" என்றனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், "பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது" என்று எச்.ராஜா கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் புதிய தலைமுறை நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்று எச்.ராஜா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False