பெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்: ஃபேஸ்புக் குழப்பம்

சமூக ஊடகம்

‘’பெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Sakthivel Shanmugam என்பவர் ஜூலை 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு சிறுவன் போலீஸ் நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ முகவரி தெரியாத சிறுவன் அவன் பெயர் மட்டும் சொல்கிறான் #செந்தில் என்று ஆகவே அவன் பெற்றோர் பார்க்கும் வரை பகிர்ந்து உதவுங்கள். இப்படிக்கு: மேச்சேரி காவல் நிலையம். தொலைபேசி:04298-278526,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதுதொடர்பாக, ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என ஃபேஸ்புக்கில் தகவல் தேடினோம். அப்போது நிறைய பேர் இந்த செய்தியை ஷேர் செய்திருந்த விவரம் கிடைத்தது.

இதில் ஒரு பதிவு, 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். அதனை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். ஜூன் 4, 2018 அன்று அந்த பதிவு மேச்சேரி போலீசார் சார்பாக மேட்டூர்- My Mettur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள விவரம் அப்படியே அச்சு மாறாமல் இடம்பெற்றதைக் காண முடிந்தது.

Facebook LinkArchived Link 

இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த செய்தி 2018ம் ஆண்டில் இருந்து பரவி வருவதாக, தெரியவருகிறது. இதையடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள 04298-278526 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விவரம் கேட்க தீர்மானித்தோம். அதனை தொடர்புகொண்டபோது, மேச்சேரி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்தான் என்பது தெளிவானது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் நம்மிடம் பேசினார். ‘’இந்த செய்தி உண்மைதான். ஆனால், 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட சிறுவன், அன்னை தெரசா ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து தப்பி வந்துவிட்டான். பிறகு, அவனை சில நாட்கள் போராடி, குறிப்பிட்ட காப்பகத்திலேயே சேர்த்துவிட்டோம். அந்த சிறுவனின் பெயர் செந்தில். அவனது விவரம் தேடி, 2018 ஜூன் 4ம் தேதி நாங்கள் பகிர்ந்த தகவல் இன்னமும் சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது. இதனால், நிறைய பேர் தினசரி எங்களை தொடர்புகொண்டு விவரம் கேட்டு, தொந்தரவு செய்கிறார்கள். இது பழைய செய்தி,’’ என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் செய்தி பழையது மற்றும் சம்பந்தப்பட்ட சிறுவன் உரியவர்களிடம் சேர்க்கப்பட்ட பிறகும், இது சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது என உறுதியாகிறது.

ஏற்கனவே, அந்த சிறுவன் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டு விட்டதால் இச்செய்தியை யாரும் இனிமேல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். இது தவறான தகவல் என நமது வாசகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி , புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்: ஃபேஸ்புக் குழப்பம்

Fact Check By: Pankaj Iyer 

Result: False