
‘’பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற இரண்டு பேரை கொலை செய்த பெண்ணுக்கு அரசு கொடுத்த பரிசு சிறை தண்டனை,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்:
தன்னை கற்பழிக்க முயன்ற இருவரை கொன்றுவிட்டாள் இந்த வீரப்பெண்..!!!கிடைத்த பரிசு கைது!!! இந்த பெண் செய்தது #சரியா_தவறா.?
சரிதான் என்றால் பகிருங்கள்
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த இருவரை இந்த பெண் கொலை செய்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். ஆனால், எப்போது, எங்கே இந்த சம்பவம் நடந்தது. இந்த பெண் யார் என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. மேலும், இந்த பெண் செய்தது சரியா, தவறா? என்று கேள்வி எழுப்பிய பதிவாளர், சரி என்றால் பகிருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், பலரும் போட்டிப் போட்டு இந்த பதிவை ஷேர் செய்வதுடன் அந்த பெண்ணை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த பெண் யார் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தி இந்துவில் அந்த பெண் பற்றி வெளியான விரிவான செய்தி நமக்குக் கிடைத்தது.


அந்த பெண்ணின் பெயர், சுபா சங்கரநாராயணன். பெங்களூருவைச் சேர்ந்தவர். பாலியல் வன்கொடுமையை தடுப்பதற்காக, அவர் இரண்டு பேரை கொலை செய்யவில்லை. மாறாக, தனக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டவரை, நிச்சயம் நடந்த நான்கே நாளில் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார் என்ற உண்மை தெரியவந்தது.
இதுதொடர்பாக தி இந்து 2014ம் ஆண்டு வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி சுபாவுக்கும் மென்பொருள் பொறியாளர் கிரிஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி சுபாவும் கிரிஷும் இரவு உணவுக்கு வெளியே சென்றுள்ளனர். அங்கே, மறைந்திருந்த சுபாவின் காதலன் மற்றும் அவனது உறவினருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கிரிஷ் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் இறந்தார்.
ரவுடிகள் தாக்கியதாக சுபா நாடகமாடினார். கடைசியில் அது பொய் எனக் கண்டறிந்த கர்நாடக போலீசார் 2004ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுபாவை கைது செய்தனர். இவருக்கு 2010ம் ஆண்டு மே மாதம் ஆயுள் தண்டனையும் ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகக் கூடுதலாக மூன்று ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது கர்நாடக விரைவு நீதிமன்றம்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுதா. மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 2010ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி சுதாவின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து அதிரடி காட்டியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் சுதா. அவரது கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார் சுதா. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சம்பவத்துக்கு முன்பே மூன்று முறை கிரிஷை கொலை செய்ய சுதா முயற்சித்துள்ளார். கிரிஷ் எப்போதும் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் பழக்கம் கொண்டவர். அவருடன் சகஜமாக பேசி, எப்போது அலுவகத்தில் இருந்து புறப்படுகின்றீர்கள் என்று கேட்டுள்ளார். அந்த தகவலை தன்னுடைய காதலனுக்கு தெரிவித்துள்ளார். அவர்களும் கிரிஷை பின்தொடர்ந்துள்ளனர். ஆனால், கொலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்காததால் கிரிஷ் தப்பினார்.
நிச்சயம் முடிந்த பிறகு, இரவு உணவுக்கு வெளியே செல்லலாம் என்று சுதாவே கிரிஷை அழைத்துள்ளார். சுதாவின் பேச்சில் மயங்கிய கிரிஷ் அவருடன் சென்றுள்ளார். பெங்களூரு ரிங் ரோடு பகுதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அங்குதான் தன்னுடைய காதலன் அருண் வர்மா உள்ளிட்டவர்களோடு சேர்ந்து படுகொலை செய்துள்ளார். இது தொடர்பாக டி.என்.ஏ இந்தியா வெளியிட்டுள்ள செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, பாலியல் வன்முறை செய்ய இரண்டு பேரை கொலை செய்த பெண் என்று இவரைப் பற்றி புகழ்ந்து செய்தி பரவுவது வேடிக்கையாக இருந்தது. தமிழில் மட்டுமல்ல பல மொழிகளில் இந்த வதந்தி பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியில் இந்த செய்தி பரவிய போது உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்து வெளியிட்ட செய்தியை மேற்கொள் காட்டியுள்ளனர். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கிரிஷ் கொலை வழக்கை பின்னணியாக வைத்து, 2015ம் ஆண்டு கன்னடத்தில் ரிங் ரோடு என்ற பெயரில் படமும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இவர் பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க கொலை செய்தவர் இல்லை; தனக்கு நிச்சயமானவரை நம்பவைத்து திட்டமிட்டு கொலை செய்தவர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த தகவல் பொய்யானது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்ற பெண்ணுக்கு சிறையா?- பரிதாபத்தை சம்பாதிக்கும் பதிவு!
Fact Check By: Praveena KumarResult: False
