உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்த எம்எல்ஏ!
‘’உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பொதுமக்கள் முன்னிலையில் ஏழைப்பெண்ணை மானபங்கம் செய்யும் எம்எல்ஏ,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதுவரை 47,000 பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்:
எவன்டா இந்த நாய்
உண்மை அறிவோம்:
கடந்த 2018, நவம்பர் 8ம் தேதியன்று இந்த பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது வேறொருவர் பகிர்ந்த பதிவை எடிட் செய்ததாகும். அதற்கு சாட்சியாக, இந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின் மேலே எழுதப்பட்டுள்ள வரிகள் உள்ளன. அதில், ‘’உபி இல் பொது இடத்தில் வைத்து ஒரு ஏழைப் பெண்ணை மானபங்கம் படுத்தும் MLA, கண்டுகொள்ளாத ஊடகம்…! தமிழனா இருந்தா #அதிகமாக பகிருங்கள்…!,’’ என்று எழுதியுள்ளனர். இந்த எழுத்துகளுடன் அப்படியே எடிட் செய்து, Jaya Raj என்பவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிட்ட பதிவில் இடம்பெறவில்லை. எனவே, இதனை Yandex உதவியுடன், ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன.
இது உண்மையான புகைப்படம்தான். அதேசமயம், போஜ்புரி மொழி படம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படத்தை பயன்படுத்தி, பலவிதமான வதந்திகள், பல்வேறு மொழிகளில் பகிரப்பட்டு வருகின்றன என்றும், Yandex ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தெளிவாகிறது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றி ஏற்கனவே பல மொழிகளில் பலரும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். ஒவ்வொருவரும், இது பீகாரில் நடந்தது, இது மேற்கு வங்கத்தில் நடந்தது, இது உத்தரப்பிரதேசத்தில் நடந்தது, என அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மையில், இது கடந்த 2015ம் ஆண்டு போஜ்புரி மொழியில் வெளியான Aurat Kilona Nahi படத்தில் வெளியான காட்சியாகும். இந்த படத்தின் யூடியுப் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Archived Link
குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் ரிங்கு கோஷ் என்ற நடிகை ஆவார். இந்த படத்தின், 2.11 மணிநேரத்தில், வதந்தி பரப்புவோர் குறிப்பிடும் அந்த காட்சி வருகிறது. அதில், ரிங்கு கோஷின் புடவையை வில்லன் நடிகர் உருவுகிறார். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் விவரம்,
1) குறிப்பிட்ட புகைப்படம், போஜ்புரி படம் ஒன்றில் இடம்பெற்றதாகும்.
2) சினிமா காட்சியை தவறாக சித்தரித்துள்ளனர்.
3) தமிழ் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளிலும் இந்த புகைப்படத்தை வைத்து, பலவித வதந்திகள், கடந்த 4 ஆண்டுகளாக, பரப்பப்பட்டு வருகின்றன.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் யாரும், இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ, செய்தி போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Title:உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்த எம்எல்ஏ!
Fact Check By: Parthiban SResult: False