
நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…
சௌகிதார் மோடி களவாணி ஹே. !

சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் முறையிடுவது போலவும் இதில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயம். சௌகிதார் மோடி களவாணி ஹே” என்று பதிவிட்டுள்ளனர்.
சன் நியூஸ் லைவ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Muhammed Sufian என்பவர் இந்த பதிவை மே 4ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆனால், இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் அளிக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதாலும் பிரதமர் மோடி எதிர்ப்பு காரணமாகவும் அதிக அளவில் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் 200 டன் தங்கம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்தே இந்த பதிவு உருவாக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பான தகவலில் உண்மை உள்ளதா என்று நாம் ஆய்வைத் தொடங்கினோம்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கடந்த மே 2ம் தேதி, “200 டன் தங்கத்தை 2014ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பியதா மோடி அரசு?” என்று செய்தி வெளியாகி இருந்தது. நவநீத் சதுர்வேதி என்பவர், ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நவநீத் சதுர்வேதிக்கு அளிக்கப்பட்ட பதிலின் போட்டோ காப்பி இணைக்கப்பட்டு இருந்தது. அதில், வெளிநாட்டு வங்கிகளில் 268.1 டன் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கான ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து 200 டன் தங்கம் மாயம் செய்தி வைரல் ஆனது. காவலாளி திருடன் என்று பொருள்படும் சௌகிதார் சோர் என்ற கோஷத்துடன் இந்த தகவல் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
ஆனால், இதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. “வெளிநாட்டு வங்கிகளில் தங்கத்தைப் பாதுகாப்பாக வைப்பது வழக்கம்தான். பேங்க் ஆஃப் இங்கிலாந்து உள்ளிட்ட வங்கிகளில் நம்முடைய தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2014ம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ வெளிநாட்டு வங்கிகளுக்கு தங்கம் அனுப்பப்படவில்லை. இது தொடர்பாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வந்த செய்தி தவறானது” என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில், ரிசர்வ் வங்கி தன்னுடைய தங்கத்தை வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், 2014ம் ஆண்டிலோ அதற்குப் பிறகோ தங்கம் வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், 2015ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தங்கம் அனுப்பப்பட்டது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
வெளிநாடுகளில் தங்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் வழக்கமான நடைமுறையை, 200 டன் தங்கம் மாயம் என்று தவறாகப் பதிவிடப்பட்டுள்ளதுடன், மோடியை திருடன் என்று விஷமத்தனமாக பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் இந்த பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?
Fact Check By: Praveen KumarResult: False
