
கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

காவல் துறை எச்சரிக்கை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை அவசரம் அனைவருக்கும் பகிருங்கள்!
யாராவது உங்கள் தெருவில் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்து இயேசுவின் சுவிசேஷம் என்ற பெயரில் நற்செய்தி வழங்குகிறோம் என்று காகிதங்களை நீட்டினாள் கை நீட்டி வாங்கிவிடாதீர்கள். அந்த காகிதத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனங்கள் தடவப்பட்டிருக்கும். அதை நீங்கள் தொடும் பொழுது உங்களுக்கு மயக்கம் மற்றும் புத்தி செயலிழப்பு நடைபெறும்.
இதைப் பயன்படுத்தி வீடு பூந்து கொள்ளையடிக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் இது சம்பந்தமாகப் பல புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. அனைவரும் எச்சரிக்கையாக…
ஏஜிஎஸ் மற்றும் இவாஞ்சலிஸ்ட் கிறிஸ்தவ அமைப்புகள் இந்த சதிகளுக்குக் காரணம். உடனடியாக வீட்டில் இருப்பவர்களுக்கும் அக்கம் பக்கத்தார் இதை பகிருங்கள். கிறிஸ்துவ மிஷனரிகளின் கொள்ளை, கொலை மற்றும் கற்பழிப்பு செயல்களை உலகறிய செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், ராஜ் இந்திரன் திரன் என்பவர் 2019 ஜூலை 7ம் தேதி பகிர்ந்துள்ளார்.
உண்மை அறிவோம்:
கடந்த வாரத்தில், சாய்பாபா அல்லது ஹரே ராமா படத்துடன் ரிக்ஷாவில் பாடல் ஒலித்தபடி வரும் நபர்களை நம்ப வேண்டாம் என்று ஒரு வதந்தி பரவியது. இது பொய்யான தகவல் என்று நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோவில் ஆய்வு நடத்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த அறிவிப்பில் இடம் பெற்றது போன்ற வாசகங்கள், தகவல்கள் பெயர் மட்டும் மாற்றி வெளியிட்டுள்ளனர்.

உதாரணத்துக்கு அந்த போலியான அறிவிப்பில், திரு நீரில் மயக்க பொருள் கலந்து கொடுத்து வீட்டைக் கொள்ளையடிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த அறிவிப்பில், துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த போலியான அறிவிப்பில், பஜ்ரங் தளம் என்ற தீவிரவாத அமைப்பு இவர்களை அனுப்பியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த அறிவிப்பில், ஏஜிஎஸ் மற்றும் இவாஞ்சலிஸ்ட் கிறிஸ்தவ அமைப்புகள் காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த போலியான அறிவிப்பில், சென்னை வேளச்சேரியில் கடந்த வாரம் 5 வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில், கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் இது தொடர்பாக பல புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், வதந்தி என்று நாம் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்திய தமிழ் நாடு காவல் துறை பெயரில் பரவிய போலியான அறிவிப்புக்கு எதிர்வினையாக இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

தமிழ்நாடு காவல் துறையை தொடர்புகொண்டு இது பற்றி விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள் “தமிழக காவல் துறை தரப்பில் இருந்து இது போன்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்பு இதேபோன்று ரிக்ஷாவில் வரும் நபர்கள் பற்றி வதந்தி கிளம்பியது. அதைப் போலவே இதுவும் உள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தால் வதந்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இந்த வதந்தியைப் பரப்பிய ராஜ் இந்திரன் திரன்-னின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னை பா.ஜ.க-வில் பணியாற்றுபவர் என்றே குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால், பா.ஜ.க-வே வதந்தியை பரப்புகிறதா என்று கேள்வி எழுகிறது. இந்தியாவை ஆட்சி செய்யும், ஒரு மதிப்பு மிக்க தேசிய கட்சியின் தொண்டர் என்று கூறிக்கொள்பவர் இதுபோன்ற வதந்தியைப் பரப்புவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.

சாய்பாபா மற்றும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்துடன் ரிக்ஷாவில் வரும் பக்தர்கள் பற்றி வதந்தி பரப்பியது எவ்வளவு மோசமான செயலோ, அதைப் போன்றதே இந்த பதிவும்… வதந்தியைப் பரப்பியவர்கள் மீது போலீசில் புகார் செய்திருக்கலாம். அதைவிடுத்து அதற்கு பதிலடியாக மற்றொரு வதந்தியை உருவாக்கியது அதைவிட மோசமான செயல். இப்படி பொய்யான தகவலைப் பரப்புவதற்குப் பதில், சட்டம் நமக்குக் கொடுத்துள்ள உரிமைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.
நம்முடைய ஆய்வில்,
கிறிஸ்தவ துண்டு பிரசுரம் கொடுத்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இது வதந்திதான், வதந்தியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாய்பாபா படத்துடன் ரிக்ஷாவில் வருபவர்கள் கொள்ளையர்கள் என்று பரவிய வதந்திக்கு எதிர்வினையாக இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்பிட்டு உறுதி செய்துள்ளோம்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள்” – ஃபேஸ்புக்கில் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: False
