கை ரிக்‌ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா? – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி!

குற்றம் சமூக ஊடகம்

கை ரிக்‌ஷாவில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்துப் பாடல் ஒலித்தபடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

POLICE 2.png

Facebook Link I Archived Link

தமிழ்நாடு காவல் துறையின் லோகோவுடன் பத்திரிகையில் வெளியான செய்தி போன்று ஒரு அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர். அதில், ” யாராவது உங்கள் தெருவில் வீட்டு வாசலில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்து சிறிய சைக்கிளில் பாட்டுப் பாடிக்கொண்டு ஆண் பெண் இருவர் வந்து திருநீறு கொடுத்தால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலிசில் பிடித்து கொடுங்கள்.

கடவுளை காண்பித்து, திருநீரில் மயக்க பொருள் கலந்து கொடுத்து, நம் வீட்டைக் கொள்ளையடித்து மார்வாடிகளிடம் கொண்டு சேர்க்க ‘பஜ்ரங் தள்’ எனும் வடநாட்டு தீவிரவாத அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

வீட்டில் உள்ளவர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள். சென்னை வேளச்சேரியில் கடந்த வாரம் 4 வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. இப்படிக்கு: தமிழ்நாடு காவல் துறை” என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த பதிவை, இர.பிரபு உவந்தான் என்பவர் 2019 ஜூலை 5ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத்தகவலில் “உசார்…ஐயா….உசாரு..! நேற்று எங்கள் வீட்டின் அருகில்…” என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள அறிவிப்பில் எப்போது வெளியானது என்ற விவரம் இல்லை. இது தொடர்பாக கூகுள், சமூக ஊடகத்தில் தேடிய போது பல மாதங்களாகவே இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

POLICE 3.png

இந்த அறிவிப்பில் பஜ்ரங் தள் என்ற வடநாட்டு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில், பஜ்ரங்தள் என்பது விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாகும். அதற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் கூட கிளைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சி.ஐ.ஏ என்ற உளவு அமைப்பு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளை மத தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. இதற்கு இந்த அமைப்புகள் கண்டனம் தெரிவித்த, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை முற்றிலும் புறக்கணிப்பதாக பா.ஜ.க அறிவித்தது. அது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பஜ்ரங் தளம் அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று இந்திய அரசு அறிவித்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி இருக்கும்போது பஜ்ரங் தளம் தீவிரவாத அமைப்பு என்று தமிழ்நாடு போலீஸ் குறிப்பிட்டதாக வெளியான இந்த தகவலின் உண்மைத் தன்மையில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டது.  

தமிழ்நாடு போலீஸ் லோகோவுடன் இருப்பதால், அதன் இணையதளத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியாக உள்ளதா என்று தேடினோம். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற அறிவிப்பு அதில் இல்லை.

POLICE 4.png

வேளச்சேரியில் நான்கு வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் உள்ளதா என்று அறிய, வேளச்சேரி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டோம். “கடந்த இரண்டு ஆண்டுகளில் அப்படி எந்த ஒரு சம்பவமும் வேளச்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லை. இது வெறும் வதந்தி. இருப்பினும் முன்பின் தெரியாதவர்கள் உங்கள் பகுதிக்கு வந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” என்றனர். 

தமிழ்நாடு காவல் துறை லோகோவுடன் இந்த அறிவிப்பு உள்ளதால், தமிழ்நாடு காவல் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர்கள், “இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் தமிழ்நாடு காவல் துறை வெளியிடவில்லை. காவல் துறை லோகோவை பயன்படுத்திப் பகிருவது தவறானது. தவறான தகவல் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நம்முடைய ஆய்வில்,

இது போன்ற கொள்ளை சம்பவம் தங்கள் பகுதியில் நடக்கவில்லை என்று வேளச்சேரி போலீசார் உறுதி செய்துள்ளனர்.

தமிழ்நாடு காவல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட தகவல் பொய்யானது, விஷமத்தனமான வதந்தி என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கை ரிக்‌ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா? – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “கை ரிக்‌ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா? – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி!

  1. உன்மையை உனர்த்தியதிற்க்கு நன்றி..

Comments are closed.