கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

Coronavirus சமூக ஊடகம் | Social சமூகம் மருத்துவம் I Medical

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் 12 மணி நேரம் என்னும் அளவில் கணக்கிட்டுள்ளார்கள்.

நமது ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை 14 மணி நேரம். நாம் 14 மணி நேரம் பொறுமை காத்தால் பொது இடங்களில் பரவியுள்ள 12 மணி நேரம் வாழக்கூடிய அந்தக் கிருமி இடைப்பட்ட நேரத்தில் அழிந்துவிடும். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அத்தநாள் நாம் பொது இடங்களுக்கு செல்கையில் அந்த இடங்கள் கிருமிகள் இன்றி காணப்படும். இந்த நடைமுறை மற்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. அங்கு இதனை உறுதிப்படுத்த ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார்கள். மீறி வெளியேறுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் அல்லது அபராதம் விதிக்கிறார்கள். நாம் நமது பிரதமரின் அன்பான வேண்டுகோளை ஏற்று ஜனநாயக முறையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்து வளமான நலமான பாரம் துணை நிற்போம். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை புதிய தகவல்கள்… New information… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Aishwarya Swaminathan என்பவர் 2020 மார்ச் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, “ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணம் இது.. இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.. வரும் சில வாரங்களில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம். மக்கள் தங்களை தாங்களாகவே ஊரடங்கு செய்துகொள்ள வேண்டும்” என்றார். ஒரே நாளில் கொரோனாவை அழித்துவிடுவேன் என்று கூறவில்லை.

ஆனால், மோடி ஒரே நாளில் கொரோனவை அழித்து நாட்டையே சுத்தம் செய்துவிடுவார் என்ற வகையில் பதிவை பரப்பி வருகின்றனர். குறிப்பாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், “ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அடுத்தநாள் நாம் பொது இடங்களுக்கு செல்கையில் அந்த இடங்களில் கிருமி இன்றி காணப்படும்” என்று கூறியுள்ளனர். 

சமூக அளவில் மக்களுக்கு பரவும் அளவுக்கு கொரோனா இன்னும் செல்லவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் அந்த நிலை வரவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவவில்லை… கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் மூலமாகவே கொரோனா பரவுகிறது என்று இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ள நிலையில், அதற்கு நேர் மாறான கருத்தை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இவர் கருத்து ‘அடுத்தநாள் வெளியே செல்லும்போது கொரோனா வைரஸ் யாருக்கும் பரவாது,’ என்பதாகும். வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனோ நோயாளி அவர்கள் மத்தியில் சென்றாலே போதும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்பதே உண்மை நிலை.

tamil.news18.comArchived Link 1
ndtv.comArchived Link 2

யாருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றே தெரியவில்லை. சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த பாடகி ஒருவர் அளித்த விருந்தில் எம்.பி, முன்னாள் முதல்வர் என பலரும் பங்கேற்றனர். கடைசியில் அந்த பாடகிக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததும்… ஜனாதிபதி மாளிகை முதல் அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் வரை அனைவரும் பீதியில் உள்ளனர்.

தற்போது அந்த பாடகி மீது வழக்கு வேறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் ஒரே நாளில் கொரோனா அழிந்துவிடும் என்று கூறுவது நம்பும் வகையில் இல்லை.

உலகம் முழுக்க கொரோனா பரவிய நிலையில் இந்தியாவில் தற்போது தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது கொரோனா. கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைந்த உடனே அறிகுறிகளை வெளிப்படுத்தாது. இரண்டு நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். இதை இன்குபேட்டர் (அடைகாக்கும்) காலம் என்று சொல்வார்கள். 

தி நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் 21 முதல் 23 டிகிரி வெப்பநிலையில்  மற்றும் 40 சதவிகித காற்றின் ஈரப்பதம் உள்ள இடத்தில் (பொதுவான அறை வெப்பநிலை) காற்றில் பரவியுள்ள கொரோனா வைரஸ் 4 மணி நேரம் வரை உயிர் வாழும்.

தாமிரம் மற்ற உலோகங்கள் மீது படியும் கொரோனா வைரஸ் 4 மணி நேரம் வரை உயிர் வாழும். அட்டை மீது விழுந்த கொரோனா வைரஸ் 24 மணி நேரம் வரை உயிர் வாழும். ஸ்டெய்லெஸ் ஸ்டீல் மீது கொரோனா வைரஸ் படிந்திருந்தால் அது 2 முதல் 3 நாட்கள் வரை உயிர் வாழும். பிளாஸ்டிக், மைக்கா பொருள் மீது படிந்த வைரஸ் 3 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும். 

nejm.orgArchived Link 1
businessinsider.inArchived Link 2

அப்படி இருக்கும்போது 14 மணி நேர ஊரடங்கு என்பது கொரோனா பரவுதலைத் தடுக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து தமிழில் தொடர் கட்டுரைகள் எழுதிவரும் மருத்துவர் கு.கணேசனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க பிரதமர் இந்த நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். ஞாயிறு அன்றுதான் மக்கள் கூட்டம் கூடும் வாய்ப்பு அதிகம், அன்று ஊரடங்கு மேற்கொண்டால் ஓரளவு பெரிய பரவலைத் தடுத்துவிடலாம். அடுத்த பத்து நாட்களும் முக்கியம்தான். அப்போதும் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதே நல்லது. அதற்குப் பிறகு ஆபத்து குறைந்துவிடும்” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைந்து வெளிப்படவே 2 முதல் 14 நாட்கள் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக பரவல் இந்தியாவில் இல்லை என்று அரசு உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் கோவிட்19 அதற்கு ஏற்ற தட்ப வெப்பநிலை, சூழல் அமைந்தால் மூன்று நாட்கள் வரை உடலுக்கு வெளியே உயிர் வாழும் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் மட்டுமல்ல, தொடர்ந்து 10 நாட்கள் இப்படி செய்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று டாக்டர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஒரே நாளில் கொரோனா அழிக்கப்பட்டுவிடும் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி அறித்தபடி நாள் முழுவதும் வீட்டில் தனித்திருங்கள்… அதன் பிறகும் அரசு அறிவிக்கும் வரை வெளியே பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்திடுங்கள் அல்லது குறைத்திடுங்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எளிதாக தப்பலாம்!

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False