
இந்தியாவை சீனா ஆக்கிரமித்தாலும் சீனாவைத்தான் ஆதரிப்போம்… இந்தியா என்ற இந்து நாட்டிற்கு எப்போதும் இடதுசாரிகள் ஆதரவு கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

2018ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியதாக அவருடைய படத்துடன் ஒரு தகவல் உள்ளது. அதில், “சீனா கம்யூனிச நாடு. சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தாலும், சீனா இந்தியாவுடன் போரிட்டாலும் இரு கம்யூனிச இயக்கங்களும் சீனாவைத்தான் ஆதரிக்கும். இந்தியா என்ற இந்து நாட்டிற்கு எப்போதும் இடதுசாரிகளின் ஆதரவு கிடையாது – தா பாண்டியன்” என்று இருந்தது.
இந்த பதிவை, ஹிந்து சனாதன தர்மம் தர்மம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேட்டி அளித்திருந்தார். இந்தநிலையில், தா.பாண்டியன் பேட்டி என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றை வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த நியூஸ் கார்டின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.
அந்த நியூஸ் கார்டில் 2018 பிப்ரவரி 1 என்று தேதி குறிப்பிட்டிருந்தது. புதிய தலைமுறை தினமும் ஏராளமான நியூஸ் கார்டுகளை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சென்று அந்த குறிப்பிட்ட நியூஸ் கார்டை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது.
இந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். புதிய தலைமுறை லோகோ, டிசைன் அப்படியே இருந்தாலும் எடிட் செய்யப்பட்டது போலவே இருந்தது. இதனால், புதிய தலைமுறையின் நியூஸ் கார்டுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது, புதிய தலைமுறை நியூஸ் கார்டு டிசைன் வேறாக இருந்தது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமுறையில் பயன்படுத்தப்பட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம்.
அந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டில் இடம் பெற்றுள்ள தா.பாண்டியன் படம், எழுத்து ஃபாண்ட், வடிவமைப்பு, லோகோ இருக்கும் இடம் என பல வித்தியாசங்களைக் காண முடிந்தது. புதிய தலைமுறை வாட்டர்மார்க் லோகோவும் இல்லாமல் இருந்தது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டையும், புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டையும் ஒப்பிட்டுள்ளோம். படம் கீழே…

மேலும், தா.பாண்டியன் படத்தை கூகுளில் இருந்து எடுத்ததும் தெரிந்தது.

இதனால், புதிய தலைமுறை இணையதள டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு பேசினோம். ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுவரும் நியூஸ் கார்டை அவர்களுக்கு அனுப்பினோம். அதை பரிசோதனை செய்த அவர்கள், “இது நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. இது போலியாக உருவாக்கப்பட்டது” என்றனர்.
சீனாவுக்கு ஆதரவாக தா.பாண்டியன் ஏதாவது பேசியிருக்கிறாரா என்று ஆய்வு செய்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 2018 பிப்ரவரியில் அவர் ஏதாவது பேட்டி அளித்துள்ளாரா என்று தேடினோம். பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் அளித்த சில பேட்டிகள் கிடைத்தன. அது எதிலும் சீனா ஆதரவு தொடர்பான தகவல் எதுவும் இல்லை.

சீனா ஆதரவு கருத்தை தா.பாண்டியன் கூறியிருந்தால் அப்போதே அது மிகப்பெரிய பிரச்னை ஆகி இருக்கும். மேலும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று மட்டும் கூறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் ஆதரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், குறைந்தபட்சம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வியாவது எழுப்பியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்டதாக பகிரப்பட்டுள்ள மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“சீனாவை ஆதரிப்போம்… இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை”– தா.பாண்டியன் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
