இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்?- விஷம பதிவு

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

இந்திய ராணுவத்தை கண்டித்தும், சீன ராணுவத்தை வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கழுத்தில் இந்திய ராணுவம் ஒழிக என்றும் சீன ராணுவத்தை ஆதரிப்போம் என்று எழுதப்பட்ட பிரசார அட்டையை கழுத்தில் மாட்டியுள்ளனர். 

நிலைத் தகவலில், “இந்த தெண்ட சோறுகளை இங்கே வளர்ப்பதால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்.? இவர்கள் இங்கிருப்பதை விட சீனத்துக்கே சென்று விடலாமே.!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை செல்வம் பா ஜ க என்பவர் 2020 ஜூன் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய ராணுவத்தினர் மீது சீனா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்கள் தேச பக்தியை நிரூபிக்க பல்வேறு வதந்திகளை பலரும் பரப்பத் தொடங்கிவிட்டனர். சில தினங்களுக்கு முன்பு மோடி அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த படத்தை தங்களுக்கு சௌகரியமாக எடிட் செய்து இந்தியாவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதாக விஷமத்தனமான வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியாத பலரும் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

deshabhimani.comArchived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, 2020 ஜூன் 16ம் தேதி கொரோனா காலத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. அதில், சீதாராம் யெச்சூரியின் புகைப்படம் இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று இந்த படம் இல்லை. சமூக இடைவெளியை கடைப்பிடித்து விலகி நின்று போராட்டம் நடத்துவது போன்ற படமே அதில் இருந்தது. 



இதேபோல, பிருந்தா காரத் படமும் இருந்தது. இதையும் எடிட் செய்துள்ளனர். 

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தின் அசலைத் தேடினோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஜூன் 16ம் தேதி போராட்டம் தொடர்பான புகைப்படம் இருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள இரண்டு படங்களின் அசல் படங்களுமே கிடைத்தன.

Archived Link

லடாக் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை விமர்சித்து, சீனாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்களா என்று பார்த்தோம்.

Archived Link

சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் இந்திய வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்திய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக இருப்போம் என்று கருத்து கூறியிருப்பது தெரியவந்தது. பிறகு எதன் அடிப்படையில் இந்த பதிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ளார்கள் என்று தெரியவில்லை. மற்றவர்கள் மீது பழிபோடுவதுதான் தேசபக்தி என்று நினைக்கிறார்களோ என்னவோ… 

Archived Link

நம்முடைய ஆய்வில், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய ராணுவத்தை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்?- விஷம பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்?- விஷம பதிவு

  1. Very first we have to punish Mr Selvam for sharing this wrong message to Twitter & prevailing tensions

  2. இது போன்ற விழிப்புணர்வு அவசியம்

Comments are closed.