தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது. 

நிலைத் தகவலில் “எடப்பாடியையும் விஜயபாஸ்கரையும் கூப்பிட்டு ஸ்டாலின் அரசியல் செய்றாருனு சொல்ல சொல்லுங்கடா….” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை எம் ஆர் சண்முகபிரபு என்பவர் 2020 ஜூன் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். இவர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

தாமோதரனின் மனைவி தன்னுடைய கணவர் மரணத்துக்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. மேலும், தனிச் செயலர் தாமோதரனின் மனைவி குற்றம்சாட்டும் பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டது போல உள்ளது. அந்த பகுதியில் தந்தி டி.வி-யின் பின்னணி டிசைன் இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரிந்தது.

இருப்பினும் அதை உறுதி செய்துகொள்ள தந்தி டிவி வெளியிட்ட நியூஸ்கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற பதிவு எதுவும் இல்லை. மேலும் இந்த போலியான நியூஸ் கார்டை தந்தி டிவி ஆன்லைன் பிரிவுக்கு அனுப்பினோம். இது போலியானது என்று அவர்களும் உறுதி செய்தனர்.

தாமோதரனின் மனைவி உண்மையில் அவ்வாறு கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி மட்டுமே கிடைத்தது. தாமோதரனின் மனைவி புகார், குற்றச்சாட்டு கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

hindutamil.inArchived Link 1
dailythanthi.comArchived Link 2

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த போது அதற்கு தி.மு.க-வின் ஒன்றிணைவோம் வா திட்டம்தான் காரணம் என்று அ.தி.மு.க-வினர் கூறினர். தமிழகத்தில் கொரோனா மரணங்களை அரசு மறைக்கிறது என்று தி.மு.க கூறியபோது கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் தெரிவித்தனர். பிறகு கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்ட தகவல் உறுதியானதும் நடந்தது. இந்த சூழலில், முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த ஒருவர் இறந்துள்ளதால் அ.தி.மு.க-வுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த பதிவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நம்முடைய ஆய்வில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைந்த தனிச் செயலாளர் தாமோதரன் மனைவி அரசை விமர்சித்து பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

Fact Check By: Chendur Pandian 

Result: False