தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா?

அரசியல் | Politics இந்தியா | India

‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசாத் துர்ரானி எழுதிய புத்தகத்தை வெளியிட்ட தேச துரோகிகள், இவர்களை நம்பி நாட்டை ஆளும் வாய்ப்பு கொடுத்து ஏமாந்துவிட்டோம்,’’ எனும் பொருள்பட எழுதியுள்ளனர்.

இது 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட செய்தியாக இருந்தாலும், இன்றளவும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை நமது வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்து உண்மை ஆராய்ந்து வெளியிடும்படி கேட்டுக் கொண்டார்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் உள்ள தகவல் பாதி உண்மைதான். ஆனால், அதில் உள்ள மீதி உண்மையை மறைத்து, அதனை தவறாக அர்த்தம் கற்பித்து தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில், இவர்கள் குறிப்பிடும் The Spy Chronicles என்ற புத்தகம், அசாத் துர்ரானி மட்டுமின்றி, ஏ.எஸ்.துலத் மற்றும் ஆதித்யா சின்ஹா ஆகியோரும் சேர்ந்து எழுதியதாகும். இதன்படி, 3 பேர் ஒன்று சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். இதில், 2 பேர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானியர் ஆவார். 

அதாவது, இதில் உள்ள எழுத்தாளர்களில், ஏ.எஸ்.துலத் என்பவர் இந்திய உளவுத் துறையான RAW-ன் தலைவராக பணிபுரிந்தவர். இதேபோல, ஆதித்யா சின்ஹா என்பவர் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர்களுக்கு அடுத்தப்படியாக, 3வது எழுத்தாளர் அசாத் துர்ரானி பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக பணிபுரிந்தவர் ஆவார்.
அப்படி இந்த புத்தகத்தில் என்ன எழுதியுள்ளனர் என்று பார்த்தால், அசாத் துர்ரானி மற்றும் ஏ.எஸ்.துலத் பதவிக்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளின் உரையாடல் தொகுப்பை, பத்திரிகையாளர் ஆதித்யா சின்ஹாவின் முன்முயற்சியில் புத்தகமாக தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பல்வேறு அரசியல், பாதுகாப்பு பிரச்னைகள், ஆசிய கண்டம், ஐரோப்பிய நாடுகளுடனான நட்புறவு மற்றும் பின்லேடனை அமெரிக்க படையினர் கொன்ற விவகாரம் உள்ளிட்ட பல விசயங்களை இந்த புத்தகம் விரிவாக அலசுகிறது.

ஆனால், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், பல்வேறு அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக, அசாத் துர்ரானி பங்கேற்க முடியவில்லை. எனவே, மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர். 

DNA India LinkArchived Link 

எனவே, நட்புறவின் அடிப்படையில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் சேர்ந்து எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து, பாகிஸ்தான் எழுத்தாளரை மட்டும் குறிப்பிட்டு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False