சோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா?

அரசியல் இந்தியா

‘’சோமாலியா நாட்டை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய இந்தியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

வச்சி செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா தொடர்பான கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது இந்தியா, சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய முதல் நாடு சோமாலியா (1990),’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது உண்மைதான். அதற்கான பணிகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை. அதேசமயம், சோமாலியா நாடு சொந்தமாக விமான சேவை இல்லாத முதல் நாடாக 1990ல் மாறியது என்பது தவறான தகவலாகும்.

சோமாலியாவில் 1991ம் ஆண்டு உள்நாட்டுப் போர் காரணமாக, அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான சோமாலி ஏர்லைன்ஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்நிறுவனம் யாருக்கும் விற்கப்படவில்லை. அப்படியே 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை வைத்திருந்து, பின்னர் மீண்டும் தனது வர்த்தகப் பணிகளை சோமாலி ஏர்லைன்ஸ் தொடங்கியுள்ளது.

தற்சமயம், சிறு ரக விமானங்கள், ஹெலிகாப்டர் சேவையை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் விரைவில் பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவையை முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளதாக, ஏற்கனவே அறிவித்திருக்கிறது. 

Somali Airlines Official website Link

எனவே, சோமாலியா சொந்தமான விமான சேவை இல்லாத முதல் நாடு என்பது தவறான தகவலாகும். இதுதவிர, இந்தியா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளதாகக் கூறப்படுவதும் தவறு.

ஏற்கனவே நிறைய நாடுகளில் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனங்கள் கிடையாது. உதாரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இலங்கையின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமாகக் கருதப்படுகிறது. இது பல ஆண்டுகளாக தனியார் வசம்தான் இருந்தது. சமீபத்தில்தான் அதன் பெரும்பான்மையான பங்குகளை இலங்கை அரசு கையகப்படுத்தியது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதை விட மிக முக்கியமாக, இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ விமான சேவை நிறுவனமாகக் கருதப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூட தனியார் வசம்தான் உள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ லுஃப்தான்ஸா கூட தனியாரால்தான் நிர்வகிக்கப்படுகிறது. அதன் பெரும்பான்மையான பங்குகளை பல ஆண்டுகளுக்கே தனியாருக்கு ஜெர்மனி அரசு விற்றுவிட்டது. இதுபற்றி படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

இதேபோல, ஆஸ்திரியா நாட்டிற்குச் சொந்தமான ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் கூட தனியார் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்படுகிறது. தொடர் நஷ்டம் காரணமாக, கடந்த 2008ம் ஆண்டில் இந்நிறுவனத்தை தனியாருக்கு அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரிய அரசு விற்றுவிட்டது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

மேலும் உதாரணமாக, ஆஸ்திரேலியா நாட்டின் அதிகாரப்பூர்வமான விமான சேவை நிறுவனம் கன்டாஸ் ஏர்வேஸ் கூட தனியார் வசம்தான் உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம்தான் இதில் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இதுபற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இது மட்டுமின்றி சொந்தமாக விமான நிலையம் இல்லாத நாடுகள் கூட உள்ளன. மேலும், நிறைய நாடுகளில் விமான சேவை மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் கூட இன்றி உள்ளன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். தேவை ஏற்படின் ஒரு நாட்டிற்குச் சொந்தமாக உள்ள விமான சேவை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதும், பின்னர் அதனை கையகப்படுத்துவதும் முதலாளித்துவ அரசமைப்பு உள்ள நாடுகளில் வழக்கமாக நடைபெறும் விசயம்தான். இதில், இந்தியா, சோமாலியா பற்றி கூறப்படுவது தவறான தகவல்கள் என்பதே இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக தெரியவருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள தகவல் தவறு என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான பதிவுகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False