சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

’சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சர்தார் படேல் சிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படும் சில கோடுகளை சுட்டிக்காட்டி, சிலை திறந்து ஒரே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். 

உண்மை அறிவோம்:
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பல்வேறு சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து, இந்திய யூனியனாக ஒரே மைய அரசின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் சர்தார் வல்லபபாய் படேல். இதற்காகவே, இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அவரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு பிரமாண்ட சிலை அமைக்க, மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டன.

இதற்கென பெரும் பொருட்செலவில், குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவுப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. அதன்மீது 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே உயரமான சிலையாக, சர்தார் படேல் சிலை நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் எல் அண்ட் டி நிறுவனம் உள்பட லண்டன், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இந்த பிரமாண்ட சிலையை நிறுவும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்தன. இதன்படி, 2018ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதியன்று, சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளில், பிரதமர் மோடி இந்த சிலையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இந்நிலையில்தான் இந்த சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, சில வெள்ளை நிற கோடுகளை சுட்டிக்காட்டி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சிலையில் மழை பெய்தால் ஒழுகுவதாகவும், அதற்கு பல கோடி ரூபாயில் ரெயின் கோட் வாங்கியுள்ளதாகவும், வதந்தி பரவிய நிலையில் அதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்தோம்.

Fact Crescendo Tamil Story Link

இதுபோலவே, மேற்கண்ட விரிசல் செய்தியும் தவறாகும். இதுபற்றி ஏற்கனவே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளன.

AltNews Link

இதேபோல, ஒரு வீடியோவை ஆதாரத்திற்காகக் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதன்படி, ராட்சத உலோகத் தகடுகளை ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத்தான் சர்தார் படேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்பட்டபோது, வெல்டிங் செய்ததால் ஏற்பட்டதே இந்த வெள்ளை நிற கோடுகளாகும்.

இதுபோன்ற வெள்ளை நிற கோடுகளை சாதாரணமாகவே, பல்வேறு கட்டிடங்கள், சிலைகளிலும் நாம் பார்க்க முடியும். அதாவது, 2 செங்கற்களை இணைக்க, நடுவில் சிமெண்ட் வைத்துப் பூசுவது போன்றதுதான் இதுவும். இப்படிப்பட்ட வெல்டிங் பூச்சுகள் சிலை திறக்கப்பட்டபோதே காணப்பட்டன. இதனை புதியதாகக் கண்டுபிடித்ததை போல தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) சர்தார் படேல் சிலையில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை.
2) அந்த சிலையை மோடி திறந்து வைத்த நாளிலேயே இந்த வெள்ளை நிற கோடுகள் வெளிப்படையாக தெரிந்தன.
3) இந்த வெள்ளை நிற கோடுகள், உலோகத் தகடுகளை இணைப்பதற்காகச் செய்த வெல்டிங் பணியால் ஏற்பட்டவை ஆகும். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False